அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 19, 2014

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா?


(இலண்டனில் நடைபெற்ற மஜ்லிசே – இர்ஷாத் என்னும் கேள்வி பதில் கூட்டத்தில் ஹஸ்ரத் கலீபதுல் மஸீஹ் மாற்றுமதத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அந்த கேள்வி பதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.) 

கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா குலாம்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா? 

இல்லை ஒரு போதும் இல்லை. ஜிஹாதின் பெயரால் போர் மூட்டுவதைத்தான் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஜிஹாதும். போரும் இரண்டு தனித்தனி விஷயங்களாகும். ஜிஹாதிலும் சில சந்தர்ப்பங்களின் போர் இடம் பெறுகின்றது. ஆனால் ஒவ்வொரு ஜிஹாதும் ஒரு போரல்ல. ஜிஹாதிற்கு திருக்குர்ஆன் தரும் விளக்கத்திற்கு மாறாக நீங்கள் என்ன விளக்கமளித்தாலும் அது இஸ்லாம் கூறும் விளக்கமாக இருக்காது. ஜிஹாதைப் பற்றித் திருக்குர்ஆனில் வரும் முதலாவது கட்டளைப்படித்தாலே அது பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஸுரத்துல் ஹஜ்’ஜில் தான் முதன் முதலில் ஜிஹாது செய்வதற்க்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அது கூறுவதாவது, 

“அநியாயமான விதத்தில், போர் செய்யக் கட்டாயப்படுத்தப் படுபவர்களுக்குப் போர் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உண்டு அவர்கள் தங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக மட்டும், வேறு காரணமுமின்றி அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் இவர்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்கவில்லை என்றால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், யூதர்களின் வணக்க இடங்களும், அல்லாஹ்வின் திருநாமம் அதிகமாக உச்சரிக்கப்படும் (முஸ்லிம்களின்) பள்ளிவாசல்களும் இடித்து நாசம் செய்யப்பட்டிருக்கும். ( திருக்குர்ஆன் 22:40,41) 

அதாவது ஏற்கனவே வாளெடுத்து முஸ்லிம்களைத் தாக்கிப் போரிடுபவர்களுக்கெதிராக போரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இஸ்லாத்தின் விரோதிகள் முஸ்லிம்களிடம் போர் செய்ய வந்தால் மட்டுமே ஜிஹாது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. ஆக்கிரமிப்பிற்கும், அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும், ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் மென்றும் தெரிகிறது. அது மட்டுமன்று அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளானவர்களுக்கு உதவி செய்ய தான் வல்லமையுள்ளவன் என்று அதாவது போர் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டவர்களைதான் வெற்றி பெறச் செய்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இதிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் மார்க்கத்தின் பெயரால் – முதலில் வாளெடுத்துப் போர் செய்வதற்கு எங்கேயும் அனுமதி அளிக்கப்படவில்லையென்று புலனாகிறது. 

போர் செய்வதற்கு அல்லாஹ் சில நிபந்தனைகளை விதிக்கிறான். 

விரோதிகள் முதலில் ஆயுதமேந்திப் போர் செய்ய வேண்டும். 

யுத்தம் செய்யப்படுபவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்களாகவும், அநியாயத்திற்காளானவர்களாகவும் இருக்க வேண்டும். 

இங்கு சிந்திக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையினரும், சக்தி மிக்கவரும், அகம்பாவக்காரர்களும், அக்கிரமக்காரர்களுமான ஒரு பெருங்கூட்டதிற்கெதிராகப் போர் செய்வதற்கு, மிகவும் பலவீனமான, அக்கிரமங்களுக்குகாளான சிறுபான்மையினரான ஒரு ஜமாத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, அந்தப் பலவீனமான சிறுபான்மையினரின் தற்கொலைக் கொப்பானதாகி விடுமே! ஆனால் இந்தச் சந்தேகத்திற்கும் அல்லாஹ்வே பதிலளிக்கிறான். சக்திமிக்கவனும், எல்லா வல்லமையுள்ளனவனுமான அல்லாஹ் அந்தப் பலவீனமான சிறுபான்மையினருக்கு உதவி செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிக்கிணங்க எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் ஒருபோரும் தோல்விக் கண்டதே இல்லை. சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மையினரான நிராகரிப்பவர்களை வெற்றி கொண்ட வரலாற்றைத்தான் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் காண்கிறோம். 

தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான். 

“எந்தக் காராணமும் இல்லாமல் அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் செய்த மிகப் பெரிய குற்றம் எங்களுடைய இரட்சகனான இறைவன் அல்லாஹ் என்று கூறியதாகும்.” 

அடுத்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 

“இறைவன் தற்காபிற்கான அனுமதி வழங்கவில்லை என்றால் யூதர்கள் கிறிஸ்தவர்களின் வணக்க இடங்களும், இறைவன் அதிகமாக நினைக்கப்படும், அவனது பெயர் அதிகமாக உச்சரிக்கப்படும் பள்ளிவாசல்களும் நாசமடைந்திருக்கும்” 

சற்று சிந்தனை செய்துபாருங்கள். இங்கு இஸ்லாமிய தர்மயுத்ததைப் பற்றிய விஷயம் விவரிக்கபடுகிறது. ஆனால் இதல் யூத, கிறிஸ்தவ தேவாலயங்களைப் பாதுகாப்புப் பற்றியும் கூறப்படுகிறது. இங்கேதான் இஸ்லாத்தின் பெருமை விளங்குகிறது. தற்பாதுகாப்பிற்காக ஜிஹாது செய்வதற்கு அனுமதி தந்தவுடன், திருக்குர்ஆன் இறைவனின் பெயரால் முஸ்லிம்களுடையவையோ, அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுடையவோ வழிபாட்டிடங்களின் பாதுகாப்பைப் பற்றியும் கூறுகின்றது. இஸ்லாம் கூறும் போதனை இதுதான்! ஏதேனும் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுகின்றனவென்றால் இந்த போதனையின்படி அவற்றைக் காக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இஸ்லாத்தின் இந்த போதனைகளை நீங்கள் உலகத்தின் முன் வைத்துப் பாருங்கள் இஸ்லாத்திற்கெதிராக ஆட்சேபனை செய்வதற்கு இஸ்லாத்தின் விரோதிகளிடம் வேறு என்ன காரணம் இருக்கிறது என்பதை பாருங்கள்? இந்தப் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு மார்க்க ரீதியாக கொள்கை வேறுபாடு கொண்டவர்களுடன் போர் செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை இடித்து தரைமட்ட மாக்கவேண்டும்; வீட்டை விட்டும், நாட்டைவிட்டும் அவர்களை வெளியேற்றவேண்டும்; அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; என்ற எண்ணம் இஸ்லாத்தின் போதனைக்கும் கட்டளைக்கும் எதிரானதாகும். ஜிஹாதின் பெயரால் நடத்தப்படும். இத்தகைய அராஜகங்களைத்தான் ஹஸ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். 

எத்தகைய தருணத்தில் ஜிஹாத் செய்யவேண்டுமென திருக்குர்ஆன் கூறுகிறதோ அத்தகைய தருணத்திலே அது கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜிஹாத் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஜிஹாதை இரத்து செய்வதற்கான அதிகாரம் எவருக்குமில்லை. ஆனால் விரோதிகள் உங்கள் மீது மார்க்கத்தின் பெயரால் அநியாயம் செய்யாமலும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாமலும் இருக்கும்போது, அந்த விரோதிகளுக்கெதிராக யுத்தம் செய்வதற்கான அனுமதியே இல்லை. அவ்வாறு செய்யப்படும் யுத்தத்தை ‘ஹிஹாத்’ என்று கூறக்கூடாது. 

அரசியல் போராட்டங்கள் பல விதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக ஈரானும், ஈராக்கும் பல வருடங்களாக போர் செய்து வருகின்றன. இது ஜிஹாத் அல்ல, அரசியல் போராகும். 

ஆகவே பகுத்தறிவின் அடிப்படையில் இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், போதனைகளையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பின்னர் அரசியல் போர்களையும் தர்ம யுத்தங்களையும் பற்றி ஆராய்ந்து அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததுவரை இஸ்லாத்திற்கெதிராக செய்யப்படும் ஆட்சேபனைகளுக்கு மறுப்பளிக்க முடியாது. 

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பகால கட்டத்தில் நடைபெற்ற ஜிஹாதுகளில் அதன் நிபந்தனைகள் பூரணமாகக் கடைபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக எம்பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு ஜிஹாதைப் பற்றியும் எவராலும் ஆட்சேபனை செய்யமுடியாது; பின்னர் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் பௌதீகமான அரசாங்கங்களின் நடை பெற்ற அரசியல் போர்களில் ஜிஹாதிற்கான நிபந்தனைகளை நிறைவேறாத காரணத்தினால் அவை ஜிஹாதுகளாக இருந்ததில்லை. அந்த நிபந்தனைகள் நிறைவேறியவை மட்டுமே ஜிஹாதுகளாக இருந்தன. இதே போன்று அரசியல் போர்களில் கிறிஸ்தவ நாடுகளும் ஈடுபட்டிருந்தன. இன்றும் ஈடுபட்டுவருகின்றன. அதற்காக நீங்கள் கிறிஸ்தவ மதத்தைக் குறை கூறுவீர்களா? 

பாலஸ்தீனத்திலிருந்து வந்த ஒரு சகோதரர் தற்போது இஸ்ரேலில் நடைபெற்றுவரும் யுத்தம் ஜிஹாதுதானே என்று வினவினர். நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். இஸ்ரேல் நாட்டில் ஆட்சி புரிவதற்கு யூதர்களுக்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் இல்லை. இது இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் செய்யப்பட்ட ஒரு சதித்திட்டமாகும். அடையாளங்களாலும், தெளிவுகளாலும் யூதர்களுகெதிராக அணிசேர்ந்து அவர்களை முறியடிப்பதில் அஹ்மதிய்யா ஜமாஅத் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. ஐ.நா சபையில் பாலஸ்தீனப் பிரச்சனைப் பற்றி ஹஸ்ரத் சௌத்திரி ஸபருல்லாக்கான் ஸாஹிப் செய்த வாதத்தைப் பற்றி உலக முஸ்லிம் நாடுகள் இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனையில் அது போன்ற ஒரு வாதத்தை இது வரை எவரும் செய்ததில்லை. ஆனால் இந்தப் போரை நபி (ஸல்) அவர்கள் செய்த ஜிஹாதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள் என்றால் முதலில் நீங்கள் என்னுடைய கேள்வி ஒன்றுக்கு பதில் தந்தாகவேண்டும். என்ன! அல்லாஹ் தனது வாக்குறுதியை (நவூதுபில்லாஹ்) மீறி விட்டானா? அல்லது பொய் கூறுகிறான் என்று நினைக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஜிஹாது செய்ய அனுமதி தருகிறேன். நான் உங்களுக்கு உதவி செய்து உங்களை வெற்றி பெற செய்வேன். என்று அல்லாஹ் வாக்குறுதி அளிக்கவில்லையா? ஆனால் நீங்கள் தற்போது செய்துவரும் யுத்தத்தில் உங்களுக்கு ஏன் இறைவன் புறமிருந்து உதவியும், வெற்றியும் கிடைப்பதில்லை? 

ஒரு பக்கம் நான் முஹ்மீன்களுக்கு உதவி புரிந்து கொண்டிருப்பேன் என்று இறைவன் கூறுகிறான். மறுபக்கம் முஸ்லிம்களுக்கு தோல்வியும், விரோதிகளுக்கு வெற்றியும் கிடைக்கிறது எனவே ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இங்கே ஏதோ குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளமுடியும். அதனை நீங்கள் திருத்தினால், ‘இந்த நாடு நல்லடியார்களுக்கு சொத்தாகக் கிடைக்கும்’ என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி பூர்த்தியாகிவிடும். எனவே மார்க்கரீதியான உங்களுடைய குறைபாடுகளை போக்கி உண்மையான முஹ்மீன்களாகுங்கள் அப்போது அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களிடம் பூர்த்தியாகும் (அந்நஸர் )

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.