அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 1, 2014

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. 

நம் விளக்கம்: 

பி.ஜே காட்டியுள்ள வசனங்கள் முழுவதையும் படித்தால் அவற்றுள் 4 வகையான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் பொருளை இத்தலைப்பின் இறுதியில் பார்க்கவும். நான்கு வகையான கருத்துக்கள். 

1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் அனுப்பப்பட்ட தூதர் ஆவார். 

2) திருக்குர்ஆன் முழு உலகுக்கும் அனுப்பட்ட வேத நூல். 

3) நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுள் காத்தம் ஆவார். 

4) நபித் தோழர்களுடன் சேராத பிற மக்களுக்காக (ஒரு தூதரை அனுப்புவான்) 

(அ) நபி (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அனுப்பப்பட்டவர். அவர் கொண்டு வந்த வேதம் முழு உலகுக்கும் இறுதி வரை வேதம் என்பதால், இனி மேல் உலகுக்கு ஒரு வேதம் வராது என்று ஏற்றுக் கொள்ளலாமே தவிர அவர்கள்தான் இறுதி நபி என்று ஆகாதே!

(ஆ) அப்படி என்றால் இதற்கு முன்னர் வந்த நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வந்துள்ளனர். அவர்களுக்கு வந்த வேதமும் அக்காலத்துக்கு, அம்மக்களுக்கு முழுமையான வேதம்தான்.எனவே அந்த சமுதாயத்தில் ஒரே ஒரு தூதர் மட்டும் வந்திருக்க வேண்டும். வேறு எந்தத் தூதரும் வரவில்லை என்பதனை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? 

மூஸா நபி (அலை) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டும் வந்த ஒரு தூதர். அவருக்கு இறைவன் தௌராத் எனும் வேதத்தை கொடுத்தான். அது அம்மக்களுக்கு அக்காலத்துக்கு வேண்டிய முழுமையான வேதமாகத்தான் இருந்தது. (6:155 ) அனால் மூஸா நபியின் அடிச்சுவட்டில் தௌராத்தைப் போதிக்க ஏராளமான நபிமார்கள் வந்துள்ளனர். (2:88) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

ஆக ஒரு சிறிய சமுதாயாத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முழுமைபெற்ற வேதத்தைப் போதிக்க பல நபிமார்கள் வந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளதாலும் முழு உலகுக்கும் இறுதிவரை முழுமையான வேதமாக திருக்குர்ஆன் இருப்பதாலும் அவர்களுக்குப் பிறகு நபி வரத் தேவையில்லை என்பது தவறாகும். 

(இ) அல்லாஹ்வின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார்கள் என்றால் அல்லாஹ் தன் திருமறையில் தெள்ளத் தெளிவாக பல இடங்களில் முஹம்மது நபிதான் இறுதித் தூதர். இனிமேல் எந்தத் தூதரும் வரமாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. பி.ஜே மேலே எடுத்துக் காட்டிய வசனங்களில் இப்படி எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? இல்லையே 

(ஈ) லா நபிய்ய பஅதி என்று நபிமொழிகளில் வந்துள்ளதே. அதற்கு எனக்குப் பிறகு நபி இல்லை என்று தானே பொருள் என்று கேட்டால் அந்த நபிமொழி இடம் பெற்றுள்ள நூல்களில் விளக்கவுரை நூல்களில் லா நபிய்ய பஅதி என்பதற்கு சரீஅத்துடைய எந்த நபியும் இல்லை என்றுதான் பொருள். இனிமேல் புதிய சரீஅத்துடன் எந்த நபியும் வரமாட்டார் என்று விளக்கம் தந்துள்ளார்கள் (அல்யவாகியது வல் ஜவாகிர், பாகம் 2, பக்கம் 24 இமாம் ஷிஹ்ராணி (ரஹ்). எனவே தௌராத்தைப் போதிக்க மூஸா நபியின் அடிச்சுவட்டில் ஏராளமான நபிமார்கள் வந்தது போல் திருககுர்ஆனைப் போதிக்க நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நபிமார்கள் வருவார்கள் என்பதுதான் திருக்குர்ஆனின் கருத்தாகும்.

உ) காத்தம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த மார்க்க அறிஞர்கள் தந்துள்ள விளக்கத்தைக் காண்போம். 

காத்தமுன்னபியீன் என்பதற்கு இறுதி நபி எனப் பொருள் கொள்பவர்கள் காத்தம் என்ற சொல்லுடன் நபிய்யீன் (நபிமார்கள்) போன்று ஒரு பன்மை பெயர்ச்சொல் சேர்ந்து, அதற்கு காலத்தால் இறுதி என்ற பொருள் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை ஹதீஸ்களிலிருந்தோ, அரபி நூல்களிலிருந்தோ, அரபி பத்திரிகையிலிருந்தோ காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. 

காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச் சொல் சேரும் போது அதற்கு சிறப்பு என்பதே பொருள் என்பதற்கான பல உதாரணங்களை ஹதீஸ்களிலிருந்தும், அரபி நூல்களிலிருந்தும், பத்திரிகையிலிருந்தும் நாங்கள் காட்டுகிறோம், இதோ சில உதாரணங்கள். 

நபிமொழிகள்: 

1) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்து, அலியே! நீர் காத்தமுல் அவ்லியா (இறைநேசர்களில் சிறந்தவர்) ஆவீர். நான் காத்தாமுல் அன்பியா (நபிமார்களில் சிறந்தவர்) ஆவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் ஸஹ்பின் ஸஹீது தைலம் தப்ஸீருஸ் ஸாபி – அல் அஹ்ஸாப்) 

இந்த நபிமொழியில் வந்துள்ள காத்தமுல் அன்பியா என்பதற்கு நபிமார்களுள் இறுதியானவர் என பொருள் கொண்டால், ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை இறுதியான வலியுல்லாஹ் என்றும் அவர்களுக்குப் பின்னர் எந்த வலியும் (இறைநேசரும்) தோன்றவில்லை எனவும் தவறாக நம்ப வேண்டியது வரும். 

2) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காத்தமுல் முஹாஜிரீன் (ஹிஜ்ரத் சிதவர்களில் சிறந்தவர்) எனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம் கன்ஸுல் உம்மால், பாகம் 13, பக்கம் 519) 

அரபி மொழி நூல்கள் / பத்திரிகையிலிருந்து.....

1) காத்தமுஷ் ஷுஅரா : புகழ்பெற்ற அரபி கவிஞராக திகழ்ந்த அபுதமாம் (கி.பி 788-845) என்பவரைக் குறித்து காத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: வாபியத்துல் அயான், பாகம் 1, பக்கம் 123, கெய்ரோ, எகிப்து) 

2) காத்தமுல் அவ்லியா: இமாம் ஷாபி (ரலி) அவர்களை காத்தமுல் அவ்லியா – இறை நேசர்களுள் சிறந்தவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் துஹ்பதஸ் ஸுன்னியா, பாகம் 45) 

3) காத்தமுல் அயிம்மா: எகிப்தைச் சேர்ந்த இமாம் அப்தா (1845-1905) காத்தமுல் அயிம்மா – இமாம்களுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (நூல், தப்ஸீர் அல் பாத்திஹா, பக்கம் 148) 

4) காத்தமுல் முஜாஹிதீன்: அஸ்ஸய்யத் அஹ்மத் ஸனூஸி என்பவர் காத்தமுல் முஜாஹிதீன் – போராளிகளுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (பத்திரிக்கை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் : 27, முஹர்ரம், ஹிஜ்ரி 1352) 

5) காத்தமத்துல் முஹக்கிகீன்: அஹ்மத் பின் இத்ரீஸ் என்பவரை குறித்து காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் ஆகாதுன் நபீஸ்) 

6) காத்தமுல் முகத்திஸீன்: டில்லியைச் சேர்ந்த இறைநேசர் ஸாஹ் வலியுல்லாஹ் அவர்கள் காத்தமுல் முஹத்திஸீன் – ஹதீஸ் கலையில் சிறந்தவர் என அழைக்கபடுகிறார்கள். (நூல்: இஜாஸா நாபியா பாகம் 1) 

7) காத்தமுல் ஹுப்பாஸ்: அல் ஸைஹு ஷம்சுத்தீன் அவர்களை காத்தமுல் ஹுப்பாஸ் – திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் தஜ்ரிதுல் ஸரீஹ் முகத்திமா, பக்கம் 4) 

8) காத்தமுல் புக்கஹா: அல் ஸைஹு நஜீத் என்பவரை கத்தமுள் புக்கஹா – மார்க்க சட்ட வல்லுனர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஸிராத்தல் முஸ்தகீம் யஹ்பா, நாள் : 27 ரஜப் ஹிஜ்ரி 1354) 

9) காத்தமுல் முபஸ்ஸிரீன்: அல் ஸைஹு ரஷீத் ரஸா என்பவரை காத்தமுல் முபஸ்ஸிரீன் – திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிறந்தவர். என அழைத்துள்ளனர். 

10) காத்தமுல் ஹுக்காம்: சிறந்த ஆட்சியாளரை காத்தமுல் ஹுக்காம் – மன்னர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. 

11) காத்தமுல் அவுஸியா: ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைக் குறித்து காத்தமுல் அவுஸியா – ஆலோசனை கொடுப்பவர்களில் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் மினாருல்ஹுதா, பக்கம் 106) 

12) காத்தமுஷ் ஷுஅரா: சிரியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அரபி கவிஞரும் எழுத்தாளருமான அபுஅலா அல்மெரி (கி.பி 973 - 1058) என்பவரைக் குறித்து கத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் முகத்தமா தீவானுல் முதனப்பி, எகிப்து, பக்கம் 4) 

காத்தமுல் முஹக்கிகீன்: அப்துல் பஸ்ல் அலூஸி என்பவர் காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுளார். (நூல்: ரூஹுல் மஆனி, முதற்பக்கம்) 

மேற்கண்ட சான்றுகள் இடம்பெற்றுள்ள நூற்களும், பத்திரிகைகளும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தால் வெளியிடப்பட்டவை அல்ல, மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச்சொல் சேரும்போது அதற்கு சிறப்பு என்ற பொருளே தவிர காலத்தால் இறுதி என்ற பொருள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் அறிவிக்கின்றன. 

இதிலிருந்து காத்தம் என்னும் சொல்லிற்குப் பிறகு இறைநேசர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், விரிவுரையாளர்கள் என்ற பன்மைச் சொல் வந்தால் அறிஞர்களுள் மிகச் சிறந்தவர், இறை நேரசர்களுள் மிகச் சிறந்தவர், கவிஞர்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நபிமார்களுள் காத்தம் என்பதும் நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் வரும். இறுதி நபி என்று பொருள் கொள்வது தவறாகும். என்று விளங்குகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.