அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 6, 2014

சுலைமான் நபியைப் பற்றிய தவறான கருத்து.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 338 இல் அவரை ஒரு சடலமாக போட்டோம். பின்னர் அவர் திருந்தினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர் ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம். சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வசனத்தில் ஸுலைமானை ஒரு சடலாகப் போட்டோம் என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும். 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் (38:35) வசனத்தின் தமிழாக்கம், நிச்சயமாக ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது அரியணையில் ஒரு உடலைப் போட்டோம். பிறகு அவர் திரும்பினார் என்பதாகும். தமிழ், ஆங்கிலத்தில் உள்ள திருக்குர்ஆனில் காணப்படும் மொழியாக்கம் இதுவே, அதாவது, 

1) அவரது அரியணையில் ஒரு சடலத்தைப் போட்டோம் என்றுதான் காணபடுகிறது. பி.ஜே எழுதியிருப்பது போல், அவரது சிம்மாசனத்தில் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று வரவில்லை. 

2) அவரை சடலமாகப் போட்டோம் என்றால் ஸுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்று பொருள் என பி.ஜே எழுதுகிறார். 

அப்படி என்றால், சுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறியிருக்கலாமே. அப்படி அல்லாஹ் கூறவில்லையே! இதற்கு நபிமொழி ஆதாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லையே! எனவே ஸுலைமான் நபி நோயுற்றார் என்பது தவறாகும். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஸுலைமான் நபிக்கு இல்லாத நோயை இருப்பதாகக் கூறுகிறார். இப்ராஹீம் நபி, நான் நோயாளி எனக் கூறியிருக்கும் போது, அவர் நோயாளி என்று பொய் சொல்கிறார் என்று பி.ஜே கூறுகிறார். இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது என்றும் பி.ஜே ஏன் கூறுகிறார்? அல்லாஹ் நன்கறிவான்!

3) ஒரு வாதத்துக்காக, ஸுலைமான் நபி நோயுற்றார் என்று வைத்துக் கொள்வோம், நோயில் விழுந்தவர் பாயில் தானே படுப்பார். அரியணையிலா போடப்படுவார்? அரியணையில் ஒரு சடலத்தைப் போட்டோம் என்று ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும். அரியணை என்பது ஆட்சி அதிகாரத்தையும், சடலம் என்பது ஆட்சி திறனற்ற தன்மையையும் குறிக்கும். அரியணை என்ற சொல்லை அல்லாஹ் வீணாகப் பயன்படுத்தவில்லை. 

4) எனவே, ஸுலைமான் நபி ஏதோ தவறு செய்தார் என்பதற்கோ, அதற்காக நோய் அவருக்கு வந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இது அவருக்குப் பிறகு அவரது அரியணையில் ஆட்சி அதிகார திறனற்றவன் அமரப் போகிறான் என்பதை, இறைவன் எடுத்துக் கூறுகிறான். சுலைமான் நபிக்குப் பிறகு அவரது அரியணைக்கு ஆட்சி திறனற்ற அவரது மகன் வந்தான் என்று வரலாறு சான்று கூறுகிறது. 

இவனைக் குறித்தே 34:14 திருக்குர்ஆன் வசனத்தில் சுலைமான் நபியின் கைத்தடியை (செங்கோலை) அரித்துத் தின்றது தாப்பத்துல் அர்ல் (உலகப் பூச்சி) என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.