அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 4, 2014

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 218 இல் நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்று திருக்குர்ஆன் வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட போது தமக்கு இறைவனிடமிருந்து தான் வஹி வந்துள்ளதா? அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா? என்று சந்தேகம் கொண்டார்கள். 

இறைவன் புறமிருந்து மனிதர்களுக்கு வேதம் அருளப்படுமா? என்ற அடிப்படையான விசயத்தில் சந்தேகம் கொண்டால் வேதமுடைய சமுதாயத்தினரிடம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

அவ்வாறு கேட்டால் இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு வேதம் வழங்கப்படும் என்ற அடிப்படையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்பதுதான் இந்த கருத்து. 

திருக்குர்ஆன் கூறப்படும் செய்திகளுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதை விட மோசமாக ஒருவர் எடை போட முடியாது! 10:94-95 வசனங்களுக்கு அவர் தந்த மொழியாக்கத்தைப் பார்த்தாலே தவறு புரியும். 

10:94 இல், (முஹம்மதே) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்தைய வேதத்தை ஒதுவோரிடம் கேட்பீராக. உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மையை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப் போரில் நீர் ஆகிவிடாதீர். 

இந்த வசனத்துக்குத்தான் பி.ஜே விளக்கம் தந்துள்ளார் அவருடைய விளக்கம் தவறு என்பதை அடுத்த வசனமே கூறுகிறது: 

10:95 இல், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய் எனக் கருதுவோரில் நீர் ஆகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நஷ்டம் அடைந்தவராவீர். 

10:94 இல் வரும் நீர் எனும் சொல் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது என்று எண்ணியதே பி.ஜே செய்த தவறான விளக்கத்திற்குக் காரணமாகும். அப்படி என்றால் 10:95 வசனத்தில் வரும் நீர் என்பதும் நபி (ஸல்) அவர்களைத்தானே குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தமக்கு இறங்கிய அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதினார் என்று பி.ஜே நம்பத் தயாரா? 10:94 வசனத்தில் வரும் நீர் எனும் சொல், நபி (ஸல்) அவர்களைக் குறிக்காது என்றால் 10:94 வசனத்தில் வரும் நீர் என்ற சொல் எப்படி நபி (ஸல்) அவர்களைக் குறிக்கும்? 

எனவே, 10:94 வசனத்தில் வரும் நீர் – உமக்கு எனும் சொற்கள் நபி (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை என்று அறிந்து கொள்கிறோம். எனவே அவரது அந்த விளக்கம் ஒரு அபத்தம் என்று அறிந்து கொள்ளுங்கள். அப்படி என்றால் அந்த நீர் என்பது திருக்குர்ஆனை வாசிக்கும் என்னையும் உங்களையும் குறித்துச் சொல்லப்பட்டவை என்று அறிந்து கொள்ளுங்கள். 

2) நபி (ஸல்) அவர்களுக்கு தனக்கு அருளப்பட்ட வேத வசனமா? என்ற சந்தேகம் வந்துவிட்டதாகவும் அந்த சந்தேகத்தை வேதக் காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேத செய்திகள் இறைவனிடமிருந்து வரும் என்ற அடிப்படையை நபி (ஸல்) அவர்களுக்கு உறுதிப்படுத்துவார்கள் என்றும் எழுதியுள்ளார்! இவ்வாறு எழுதுவதற்கு இவரால் எப்படி முடிந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் தன் 40 வது வயதில் தனக்கு வஹி வந்த போது, தனக்கு வந்தது வேத வஹியா? என்பதைக் கேட்டுத் தெரிய வேண்டிய தேவை என்ன? கிறித்தவர்கள் தங்களுக்கு வந்த வேத நூற்களைப் படித்ததைப் பார்த்துத் தெரிந்திருப்பார்களோ? முதல் வஹி வந்த போதே அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இன்ஜீலை மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வரக்கா பின் நவ்பல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களிடமிருந்து தனக்கு வந்தது வேத வஹியே என்று அறிந்து தெரிந்து, முழுக்க உணர்ந்து தெரிந்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மதினாவில் உள்ள வேதக்காரர்களிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது எப்படி வரும்? 

3) நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு எழுதும் இவர் ஈஸா நபி அவர்களைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள். 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 276 இல் பி.ஜே 

வேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் 40 வயதில்தான் என்று சில பேர் கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சித்தரிக்கின்றனர். 

யஹ்யா நபி பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள். சிறுவராக இருக்கும் போதே அவருக்கு வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது. 

மேலும் 19:30 இவ்வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே தம்மை இறைவனின் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாக கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும். 

இந்த விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருபக்கம் பிறந்த மேனியுண்ட தாயின் மார்பில் பாலருந்தி தாயின் மடியில் சிறுநீரும் மலமும் கழிக்கும் சிறு குழந்தைகளுக்கு கையில் வேதம் கொடுக்கப்படுகிறதாகவும் அவர்கள் தங்களை நபி என்றும் எனக்கு இந்த வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பேசும் பாலருந்தும் பச்சிளம் குழந்தைகள்!

மறுபக்கம் ஒரு நபிக்கு மணமுடித்துப் பிள்ளைகளுக்குத் தந்தையாகிய பின் நபியாகி வேதம் வழங்கப்பட்ட பின்னர் பல்லாண்டுகள் கழித்து தனக்கு வழங்கப்பட்டது வேதமா? என்று சந்தேகம் வருகிறதாம். அதனை வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிய வேண்டுமாம். யா அல்லாஹ்! நீ எங்களை இந்த மூட முல்லாக்களின் வழிகேடுகளிலிருந்து காப்பாற்றியதற்குரிய நன்றிக்கடனை நாங்கள் எப்படி செலுத்தப் போகிறோம்? அதற்கு எங்கள் வாழ்நாள் எல்லாம் போதாதே!

4) தங்களை நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றும் வேதத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் வாய்கிழிய பேசும் இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அநியாயத்தை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப் போகிறார்கள்? 

5) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் முதல் வஹியின் போது ஓதுவீராக! உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! என்று கூறிய பின்னரும் வேதச் செய்திகள் இறைவனிடமிருந்து மனிதனுக்கு வருமா? என்ற சந்தேகம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்று பி.ஜே எழுதுகிறார். எனவே இவர் ஒரு நபியின் உண்மை இலக்கணத்தை உண்மையிலேயே அறியாததின் காரணமாகத்தான் பாலருந்தும் பாலகர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்து சுமக்க முடியாத வேதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு இது வேதம் என்று கூறினார்கள் என்று எழுதுகிறார். 

நல்ல வேலை நபியாகப் பிறக்கும் போதே அவர்கள் கையில் வேதத்துடன் பிறந்தார் என்று எழுதவில்லை! (நவூதுபில்லாஹ்) 

6) அல்லாஹ் திருக்குர்ஆனில் நபிமார்களைத் தேர்ந்தெடுக்கின்றான் (22:76) என்ற சொற்றொடரைக் கையாளுகிறான். நபிமார்களைப் பிறக்கச் செய்கிறான் என்று எங்கும் கூறவில்லை. நபியாக ஆக்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறது. நபியாகப் பிறக்க செய்தான் என்று கூறவில்லை. 

ரஸுல்மார்கள் அனுப்பப்பட்டுள்ளார்களே தவிர ரஸுலாகப் பிறப்பார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. 

தன் தூதை வழங்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர தூதராகவே பிறந்தார் என்று கூறவில்லை. (6:125) 

7) யஹ்யா நபியும், ஈஸா நபியும் வயிற்றிலிருந்து வெளிவரும் போதே நபியாக ரெஸுலாக வந்தார்கள் அவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்றால் 

அவ்விருவரும் இறைவனிடமிருந்து செய்திகள் பெற்றிருக்கவேண்டும். அதை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வேத வசனங்கள் இறங்கின அவர்கள் மக்களை அழைத்து அவர்களிடம் அவற்றை அறிவித்தார்கள் என்பதற்கு தக்க ஆதாரங்கள் வேண்டும். அப்படி அவ்விருவரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் பிறக்கும் போதே நபியாக ரஸுலாக பிறந்தார்கள் என்பது தவறாகும். 

!9:13 இல், யஹ்யாவே! நீர் வேதத்தை உறுதியாகப் பற்றி கொள்க என்று கூறினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து நாம் தெரிவது என்ன? யஹ்யா நபியின் காலத்தில் அவரது சமுதாய மக்கள் வேதத்தை விட்டுவிட்டு, வேதமல்லாத ஹதீஸ் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கி வந்துள்ளனர். என்றும், எனவே யஹ்யா நபி அம்மக்களுக்கு இறைக்கட்டளைக்கு ஏற்ப தவ்ராத் வேதத்தை மக்கள் உறுதியாகப் பற்றிப் படிக்க ஏவினார். வேதத்தின் வழியில் வாழ வலியுறுத்தினார் என்றும் தெரிகிறது. 

8) நபி என்போர் அச்சமூட்டி எச்சரிப்போர் என திருக்குர்ஆன் (33:46) கூறுகிறது. இறைவனின் கட்டளைகளை எடுத்துச் சொல்வதுதான் இறைத்தூதர்களின் பணியாகும் என (5:100) திருக்குர்ஆன் கூறுகிறது. யஹ்யா நபியும், ஈஸா நபியும் பச்சிளம் குழந்தைப் பருவத்தில் அப்பணிகளை எப்படி நிறைவேற்றினார்கள்? 

9) யூனுஸ் நபி ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் அப்பணியை மக்களுக்குச் செய்யாமல் விட்டுச் செல்ல நினைத்ததை இறைவன் விட்டு வைத்தானா? இல்லை என்றால், பச்சிளம் பாலகர்களிடம் தன் தூதுப் பணியை வீணாக விட்டு வைத்திருந்தான் என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம்! அப்படி அப்பச்சிளம் குழந்தைகளை நபியாக்க வேண்டிய தேவை என்ன? 

10) அன்னை கதீஜா (ரலி) அவர்களும் வரக்க பின் நவ்பல் அவர்களும் முதல் வஹியிலிருந்து நபி (ஸல்) அவர்களை நபி என்றும் அவர்களுக்கு வந்தது வேத வசனம் என்றும் அதை ஜிப்ரீல் கொண்டு வந்தார் என்றும் தெரிந்து கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வந்தது வேத வஹி என்பதில் ஐயம் கொண்டவராக இருந்தார்கள் என்று இந்த ஆலிம்கள் எண்ணுவது எவ்வளவு கொடுமை! அந்த கிறிஸ்தவர்களுக்கு இருந்த அறிவு கூட இந்த முஸ்லிம் ஆலிம்களுக்கு இல்லையே!

11) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இப்படி எடை போடும். இந்த பெயர் தாங்கிய ஆலிம்கள் இக்காலத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்துள்ள உம்மத்தி நபியும், மெய்ப்பிக்கும் தூதரும் ஆகிய இக்காலத்தின் இமாமை எப்படி நம்புவார்கள்? முஸ்லிமாக பிறந்து வளர்ந்து ஆலிம் பட்டம் பெற்றவர்களின் கதியே இது என்றால் யூத, கிறித்துவ மக்களின் நிலை என்ன? எனவே முஸ்லிம்களே! இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.