அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

கற்பனைக் கதைகளின் மணிமகுடம்


(பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு)

"இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. "போலிகளை இனம் காண இந்த நூல் உதவும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது" என அதனுடைய ஆசிரியர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய மார்க்க உலகில் பரவியுள்ள மூட நம்பிக்கைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் மணிமகுடமாகத் திகழ்வது ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் பூத உடலோடு உயிர் வாழ்கிறார் என்பதாகும் என்ற பேருண்மையையும் அந்த நூல் தெளிவுபடுத்திக்காட்டுகிறது. இது போன்றதொரு கட்டுரை 1989 மே மாத நஜாத் இதழில் பக்கம் 50 முதல் 53 வரை இதே நடையில் இதில் காட்டப்பட்டுள்ள குரான் , ஹதீஸ் மேற்கோள்களையே ஆதாரங்களாகக் காட்டி தௌஹீது மௌலவி பிஜைனுல்ஆப்தீன் உலவி என்பவரால் எழுதப்பட்டிருந்தது. தற்போது தலைப்புதான் மாறியுள்ளதே தவிர கருத்தில் ஏதும் மாற்றமில்லாத நிலையில் புதுத்தலைப்பில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நூலை எழுதியுள்ளார். ஆகா தௌதீதுவாதிகளின் சிந்தனைத் திறனும் கதைகளின் அடிப்படையிலமைந்த கற்பனை நம்பிக்கையிலான ஈசா நபி (அலை) அவர்களின் நிலையை இவர்களின் எழுத்துக்களிலிருந்தே நாம் அலசி ஆராய்வோம்.

ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் மரணிக்காமல் உயிர் வாழகிறார் என்பது ஒரு கற்பனைக்கதை மட்டுமேயாகும் என்பதற்கு அந்த நூலில் அதன் ஆசிரியர் தரும் சான்றுகளையே கீழே தருகிறோம்:

முதலாவதாக அந்த நூலில் கூறப்பட்டுள்ள கற்பனைக் கதைகளுக்கு திருக்குரானிலோ நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லாதது போலவே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் மரணமடையாமல் பூத உடலோடு எங்கேயோ உயிர் வாழ்கிறார் என்பதற்கு திருக்குரானிலும் நபி மொழிகளிலும் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதே உண்மையாகும். ஹிலுறு (அலை) சம்பந்தமாக மக்கள் கூறக்கூடிய கற்பனைக் கதையை மறுப்பதற்காக அந்த நூலில் ஆசிரியர் தரும் சான்றுகள் அனைத்தும் ஈசா நபி (அலை) அவர்களும் இறக்காமல் உயிர் வாழ்கிறார் என்ற நம்பிக்கையும் கற்பனைக் கதையேதான் எனத் தெளிவாகிறது, அந்த நூலில் பக்கம் 37l '(நபியே) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (என்றென்றும் இருக்கக்கூடிய) நித்திய வாழ்வை நாம் ஏற்படுத்தியதில்லை' (அல்குரான் 21;34) திருக்குரான் வசனத்தைக் குறிப்பிட்டு 'நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையை தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லா கூறுகின்றான்.

இந்த வசனத்திலிருந்து நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்கமுடியாது எனத் தெளிவாகின்றது. இந்தப் பொது விதியிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வோ அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். "ஈசா (அலை) மட்டுமே குரான் ஹதீஸ் மூலம் இந்த விதியிலிருந்து தற்காலிக் விளக்குப் பெறுகிறார்கள் " என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

இந்த கூற்றில் கோடிட்ட வசனம் அதாவது 'ஈசா நபி (அலை) மட்டும் விதிவிலக்கு பெறுகிறார்' என்பது ஆசிரியரின் சொந்தக் கற்பனைக் கதையே அன்றி அதற்க்கு குரான் ஹதீஸில் எந்தச் சான்றும் கிடையாது. ஈசா (அலை) மட்டும் இந்த பொது விதியிலிருந்து விளக்களிக்கப்பட்டிருக்கிறார் என்று அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ எங்குமே கூறாததை ஆசிரியர் கற்பனையாகக் கூறியுள்ளார். அல்லாஹ் ஒரு விஷயத்திற்கு விதி விளக்களிப்பதாக இருந்தால் தெளிவாகக் கூறியுள்ளதாகவே திருகுரான் மூலமாக அறிய முடிகிறது. உதாரணத்திற்கு 'ஸ்ஃபாத்' தைப் பற்றி அதாவது சிபாரிசு பற்றி அல்லாஹ் கூறுகிறான் 'எவருடைய பரிந்துரையும் பயனளிக்காது என்று ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டு 'எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையை தவிர ' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான் . (பார்க்க அல்குரான் 20:109). அது போன்று ஹராம், ஹலால் விஷயத்தில் பொதுவாக ஒரு சட்டத்தை கூறிவிட்டு 'நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான். இது போன்று எண்ணற்ற விதி விளக்குகளை அல்லாஹ்வே தெளிவுபடக் கூறியுள்ளதை நாம் திருகுரானில் காணலாம்.

அதுபோல் மனிதர்களுக்கென்று பல சட்டங்களையும் நியதிகளையும் வகுத்துள்ளதாகக் கூறக்கூட்டிய அல்லாஹ் எந்த இடத்திலுமே ஈசா (அலை) அவர்களைப பற்றி மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு மட்டும் இது பொருந்தாது, விதிவிலக்கு என்று கூறியுள்ளதாக எங்குமே காணமுடியாது உதாரணத்திற்கு திருக்குரானில் 7 வது அத்தியாயம் 26 வது வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கென்று வகுத்துள்ள சட்டம் 'நீங்கள் பூமியிலேயே வாழ்வீர்கள், பூமியிலேயே மரணிப்பீர்கள் பூமியிலிருந்தே எழுப்பப்படுவீர்கள்' என்று கூறியுள்ளதாகும் இந்த இறை விதியிலிருந்து ஈசா (அலை) அவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கூறியிருந்தால் அவருக்கு விதி விளக்கு என்று கூறலாம் , ஏற்கலாம். அவ்வாறு அல்லாஹ் கூறவில்லையே , எவ்வாறு ஏற்பது? ஆக இந்த கதையும் மாற்ற கற்பனைகதைகள் போல் இந்த ஆசிரியர்களைப் போன்றவர்களால் புனையப்பட்ட கற்பனையாகும் என்பது தெளிவாகிறது.

இதற்கு அந்த நூலின் ஆசிரியர் தரும் சான்றுகளைப் பாருங்கள் :அல்குரான் 3:81 வது வசனமாகிய 'நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் தந்துள்ளேன்; உங்களிடம் இருப்பவற்றை மெய்ப்பிக்கும் தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நம்பிக்கை கொண்டு நிச்சயம் உதவியும் செய்ய வேண்டும் என்று நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்து, "நீங்கள் இதனை உறுதி படுத்துகின்றீர்களா?" என்னுடைய இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றீர்களா?' (நபிமார்களை நோக்கி) கேட்டான். "நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் . (அல்குர்ஆண் 3:81) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு தொடர்ந்து எழுதுகிறார்: "இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மாற்ற நபிமார்கள் உயிருடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் கட்டாயம் நபி (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு பக்கபலமாகவும் நிற்க வேண்டும் என்று எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கை எடுத்ததை அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக மூசா (அலை) உயிருடனிருந்தால் என்னைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள் . அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) ஆதாரம்: அஹமது.

மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை இந்த நபிமொழி தெளிவாக்குகிறது. "மூஸா (அலை) உட்பட எவர் உயிருடன் இருந்தாலும் அவர் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொள்ளவேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக உதவியும் செய்யவேண்டும் என்பது அவர்களின் கடமையாகும்" என்றும் எழுதியுள்ளார். (பார்க்க பக்கம் 37-33)

மேற்கண்ட விளக்கத்தை எழுதிவிட்டு என்னென்ன கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி ஹிளுறு (அலை) அவர்கள் உயிர் வாழ்கிறார் என்பது கற்பனை கதைதான் என்பதை நிருபிக்க ஆசிரியர் முர்பட்டிருக்கிராரோ அதே ஐயங்களும் கேள்விகளும் ஈசா நபி (அலை) அவர்கள் விஷயத்திலும் நமக்கு எழுகிறதல்லவா? அதாவது 'ஹிளுறு (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்' என்று கூறுகின்றாரே ஆசிரியர், அவரிடம் நாம் கேட்போம் ஹஸ்ரத் ஈசா நபி (அலை) மட்டும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்ததாக நீங்கள் நம்புகிறீர்களே! அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்டார்களா? ஆசிரியரின் கூற்றுப்படி ஈமான் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஹிளுறு (அலை) அவர்களுக்கு மட்டும்தான் மேற்படி 3:81 வசனம் பொருந்தும் ! ஈசா நபி(அலை) அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா? இந்த ஆயத்திலாவது ஈசா நபி(அலை) அவர்கள் மட்டும் இந்த விதியிலிருந்து விளக்கு பெறுகிறார் என்று அல்லாஹ் கூறி உள்ளானா? அல்லாஹ் கூறாத ஒன்றைக் இட்டுக்கட்டி கூறுவதுதான் தௌஹீது சிந்தனையா ?

அடுத்து ஆசிரியர் கூறுகின்றார்:"இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்தபோதும் பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சகாபாக்கள் போராடிய போதும் ஹிளுறு (அலை) அவர்கள் அந்த போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ஹிளுறு (அலை) உட்பட எல்லா நபிமார்களும் (ஈசா நபியும்) இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் . இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" என ஹிளுறு (அலை) விசயத்தில் தனது வாதத்தை நிலை நாட்ட ஆசிரியர் இவ்வாறு கேட்கிறார் .(பக்கம் 39).

அப்படியானால் அவரிடம் நாம் கேட்போம். ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கிறாரல்லவா: அந்த போராட்டங்களில் அவராவது பங்கெடுத்திருக்க வேண்டாமா? உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நபிமார்களில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் உட்படுகிறார் அல்லவா? இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" ஈசா நபிக்கு மட்டும் இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ்வோ ரசூலோ கூறவில்லையே! அப்படியானால் அவராவது வந்து துணை செய்திருக்க வேண்டுமல்லவா!

அடுத்து ஆசிரியர் கூறுகிறார் : "உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்ய தவறியிருந்தால் அவர் கடமை தவறியவராகின்றார் [அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக.]" என்றும் கூறுகின்றார் . அப்படியானால் ஹஸ்ரத் ஈசா (அலை) மட்டும் கடமை தவறியவராகமாட்டாரா? [நிச்சயம் அவர் கடமை தவறியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் அந்த நேரத்தில் உயிருடன் இல்லை . உயிரோடு இருந்திருந்தால் கட்டாயம் வந்து உதவி செய்து கடமையை நிறைவேற்றியிருப்பார்].

மேலும் ஆசிரியர் எழுதுகிறார் : "எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்றால் 'நமது காலத்தில் உயிருடன் இருக்க முடியாது' என்று முடிவுக்கு நாம் உறுதியாக வரமுடிகின்றது." [பக்கம்:39]ஹிளுறு(அலை) பற்றி ஆசிரியர் வரும் உறுதியான முடிவுக்கே ஹஸ்ரத் ஈசா (அலை) நபி பற்றியும் அவர் கூறும் அனைத்து சான்றுகளின் அடிப்படையிலும் நாம் வரவேண்டியுள்ளது. அதாவது ஈசா நபி உயிரோடில்லை என்ற உறுதியான முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது .

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் " என்ற நபி வசனமும் "எல்லா நபிமார்களும் இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குருதியளித்துள்ளனர்." என்ற வசனமும் ஈசா நபி (அலை) யை 'இனிமேல் வந்து உதவுவார்' என்று இவர்கள் அவிழ்த்து விடும் புதுக்கதையைத் தடை செய்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.