அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 19, 2012

அல் ஜன்னத்தின் இறுதி நபித்துவம்


அல் ஜன்னத் இதழில் ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கேள்வி திருத்தப்பட வேண்டியதும் அதற்க்கான பதில் மறுக்கப்படவேண்டியதுமாகும்

"3:81, 33::7  வசனங்கள் நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு நபிமார்கள் வரமுடியும் எனக் கூறுவதாக என் நண்பர் வாதிடுகிறார் இது சரியா? என்பதுதான் கேள்வி.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் திருக்குர்ஆனுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான வேறு நபிமார்கள்  வரமுடியும் என எந்த முஸ்லிமும் நம்பவில்லை. ஆயினும் திருக்குர்ஆ னுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் உட்பட்டவராக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஈசா நபி தோன்றுவார்கள் என எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். அது குறித்து முன்னறிவிப்புகள் திருக்குரானிலும். ஹதீஸிலும் நிறைய உள்ளன. இதனை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.

3:81, 33:7 வசனங்கள் இந்த கருத்தை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது உங்களுக்கு வேதமும் ஞானமும் வழங்கப்பட்ட பின் உங்களிடமுள்ள அந்த வேதத்தையும் ஞானத்தையும் மெய்ப்பிப்பவரான ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று அவருக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லா நபிமார்களிடமும் உறுதி மொழி வாங்கியதாக 3:81 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அந்த உறுதிமொழியையே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் வாங்கியதாக 33:7 வசனம் கூறுகிறது. எனவே திருக்குரானுக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவராக திருக்குரானையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் மெய்ப்பிக்கின்றவராக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என முன்னறிவிக்கப்பட்ட ஈசா (நபி) வருகின்றபோது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தைத்தான் உணர்த்துகின்றன. 

ஈசா  நபி வருகின்ற போது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற போதனை இவ்வசனங்களில் இருப்பதை அல் ஜன்னத் தந்துள்ள பதிலில் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனங்களுக்கு அல் ஜன்னத் தந்துள்ள விளக்கம் திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் முரணானதாகும்.

"நபிமார்களே! உங்களை நான் நபியாக நியமித்து வேதத்தை வழங்கிய பின் உங்களிடம் மற்றொரு நபி வந்தால் அவரை நீங்கள் ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் இவ்வசனத்தின் சாராம்சம்' என்று எழுதியுள்ளது. அதாவது இந்த நபி உறுதி மொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும், நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. அல் ஜனனத்தின் இந்தக் கருத்து தவறானது என்பதைக் காட்டும் வகையில் தொடர்ந்து வரும் வசனம் எச்சரிக்கிறது. அதாவது 'எனவே இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள்தாம்' (3:82) இதிலிருந்து 3:81- இல் கூறப்பட்ட உறுதிமொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும் எனக் கூறினால் நபிமார்களிடையேயும் இறைக் கட்டளையைப் புறக்கணிப்பவர்கள் இருப்பார்கள் அவர்களும் தீயவர்களாகிவிடுவார்கள் (அவ்வாறு நினைப்பதைவிட்டும் அல்லாஹ் காப்பாற்றுவானாக) என்று பொருளாகிவிடும்.

"நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்திருந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என 33:7 வசனத்திற்கு அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது. இது முற்றிலும் பேதமைத்தனமான ஒரு விளக்கமேயாகும். இவர்களின் கூற்றுப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியும் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அல்லாஹ் அவர்களிடம் உறுதிமொழி வாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?  இல்லாத ஊருக்கு வழி சொல்வதைப் போலல்லவா அது அமைந்துவிடும்.

அல் ஜனனத்தின் இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக மறுத்துள்ளார்கள். அதனை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் சென்ற போது, அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருந்ததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் நபியில்லை என்று கூறியதற்கு, "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதால் ஹாரூன் போல் அலியும் நபியாக இருப்பாரோ என்ற சந்தேகம் வந்துவிடுமோ என்பதற்காக எனக்குப் பின் எந்த நபியும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் " என அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது . எனவே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என்றுதான் 33:7-க்கு பொருள் என்ற அல் ஜனனத்தின் கருத்து முழுக்க முழுக்க அபத்தமானது. ஏனெனில் தமது வாழ்நாளில் இன்னொரு நபி வரமாட்டார், வர வாய்ப்பே இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள்.  இந்நிலையில் 'வாழும் காலத்திலியே இன்னொரு நபி வந்திருந்தால்' என்ற பேச்சிற்கே இடமில்லை.

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு திருக்குரானையும் அதன் ஞானத்தையும் மெய்ப்பிக்கக் கூடிய ஒரு தூதரைப் பற்றியே இந்த வசனம் கூறுகிறது. அவ்வகையாக தூதர்கள் வரமாட்டார்கள் என்றால் இறைவன் மேற்கண்ட உறுதி மொழியை வாங்கி இருக்கமாட்டான். மேலும் ஈசா நபியின் வருகையைப் பற்றிய தெளிவான முன்னறிவிப்புகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. அவற்றிற்கேற்ப ஈசா நபி தோன்றினால் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் வலியுறுத்துவதாகவே அந்த வசனத்தை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஒரு தவறான விளக்கம் தந்த பின் அல் ஜன்னத் "ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன" எனக் கூறுகிறது.

ஹஸ்ரத் ஈசா நபி வருவார்கள் என நம்பும் எந்த முஸ்லிமும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார். வரக்கூடிய ஈசா நபியாக இருக்க மாட்டார்கள் என எவரேனும் கூறினால் அது கற்பனையும் சுய விளக்கமுமாகும். மேலும் அது நபிமொழிகளுக்கு முரணான கூற்றுமாகும்.

வரக்கூடிய ஈசா நபியைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'நபியுல்லாஹிஹி ஈசா' அல்லாஹ்வின் நபியாக ஈசா அவர்கள் வருவார்கள் என்றே முஸ்லிம் ஹதீஸில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
"எனக்கும் அவருக்கும் (ஈஸாவுக்கும்) இடையில் நபியில்லை. அவர் வருவார்." (முஸ்னத் அஹ்மத்) அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஈசா நபி வரையிலுமான காலத்தில் வேறு நபி வரமாட்டார்கள். இதுவும் வரக்கூடிய ஈசா அவர்கள் நபியாகவே இருப்பார் எனத் தெரிவிக்கிறது.

"அவர்கள்தான் இறுதி நபி என்று கூறப்படும்போது 'இறுதி நபி' என்பது ஏதோ மாபெரும் பதவி எனத் தோன்றும். உண்மையில் காலத்தால் இறுதி என்ற பொருளில் 'இறுதி நபி' என்று தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அரபுச் சொல் திருக்குரானிலோ, ஹதீஸிலோ எங்கேயும் வரவில்லை. எவரும் காட்டவும் முடியாது. 'அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது' என்ற தவறான கருத்திற்கு அல் ஜன்னத் தரும் சான்றுகளைப் பார்ப்போம்.

முதலாவதாக காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு நபிமார்களின் முத்திரை என மொழிபெயர்த்துவிட்டு அதற்கு அகராதிகளை ஆய்வு செய்வதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமே ஏற்கப்படவேண்டுமென அல் ஜன்னத் கூறுகிறது. இதிலிருந்து காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு அகராதியைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் தரும் தவறான அர்த்தம் அவற்றில் இல்லை. என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார் எனத் தெரிகிறது. 'காத்தமுன்னபியீன்' என்ற சொற்றொடருக்கு இவர்கள் தரும் பொருளில் அதனை நபிகள் நாயகம் (ஸல்) எங்குமே பயன் படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தியதாகக் கூறுவது இவர்களின் சுய விளக்கமேயாகும்.

அல் ஜன்னத் ஆறு ஹதீஸ்களைக் குறிப்பிட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் என்ற கருத்தை அந்த ஹதீஸ்களும் கூறவில்லை என்பதை அந்த ஹதீஸ்களைக் கூர்ந்து கவனித்தாலே புரியவரும். முதலாவதாக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள ஈசா நபியின் வருகைக்கு வேறு எந்த ஹதீஸும் எதிராகவே இருக்க முடியாது.

முதல் ஹதீஸ்: 'எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தங்களை நபி என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரை ஆவேன். எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை."

இந்த ஹதீஸில் எனக்குப் பின் நபியென்று வாதிடும் எல்லோரும் பொய்யர்கள் ஆவார்கள் எனக் கூறவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்கும் வரவிருக்கும் ஈசா நபிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய பொய்வாதிகளின் எண்ணிக்கையைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டார்கள் என இஸ்லாமிய வரலாறும் கூறுகிறது. முஸ்லிம் ஹதீஸுக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள இக்மாலுள் இக்மால் என்ற நூலில், "இந்த ஹதீஸ் தனது உண்மையை நிரூபித்துவிட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நம் காலம் வரையில் நபியென்று வாதிட்ட பொய்யர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை முடிவடைகிறது. வரலாற்றைப் படித்தவர்கள் இதனை அறிவர்" (தொகுதி 7 பக்கம் 258) இந்த நூலின் ஆசிரியர் ஹிஜ்ரி 828இல் மறைந்தார். எனவே ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.

இரண்டாவது ஹதீஸ்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் செல்கின்ற போது அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் எந்த நபியுமில்லை" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸில் மூஸா நபியின் காலத்தில் அவர்களுடன் ஹாரூனும் நபியாக இருந்ததைப்போல் அலி(ரலி) நபியாக இல்லை என்ற கருத்தையே தருகிறது என்பதை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த ஹதீஸும் ஹஸ்ரத் ஈசா நபியின் வருகைக்குத் தடைஇல்லை என்பது மட்டுமின்றி இனிமேல் எந்த நபியும் வர முடியாது என்ற கருத்தையும் தரவில்லை.

மூன்றாவது ஹதீஸ்: " நான் இறுதி நபியாவேன் அதாவது எனக்குப் பின் எந்த நபியும் இல்லை." அறிவிப்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி). இப்படி ஒரு ஹதீஸ் இல்லை. இருந்தால்தால் ஆதாரத்துடன் அரபி மூலத்துடன் அல் ஜன்னத் வெளியிடட்டும். இது அல் ஜன்னத் இட்டுக்கட்டியுள்ள நபி மொழியாகவே இருக்க முடியும்.

நான்காவது ஹதீஸ்: இஸ்ரவேலர்களுக்கு நபிமார்கள் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னொரு நபி வழி நடத்துவார். ஆனால் நிச்சயமாக எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது. எனது கலீபாக்கள்தான் தோன்றுவார்கள்.

இஸ்ரவேலர்களிடையே ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து நபிமார்கள் வந்ததைப் போல் இந்த உம்மத்தில் தொடர்ந்து நபிமார்கள் வரமாட்டார்கள். மாறாக தொடர்ந்து உடனே வரக்கூடியவர்கள் கலீபாக்களாகேவே இருப்பார்கள் என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஈசா நபி வரமாட்டார் என்றோ, எந்த நபியும் வர முடியாது என்றோ கூறவில்லை.

ஐந்தாவது ஹதீஸ் : "தூதுத்துவமும் நுபுவத்தும் முடிந்து விட்டன. எனக்குப் பின் எந்த ரசூலும் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ்பின் மாலிக் (ரலி) நூல் : திர்மிதி."

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் அனஸ் பின் மாலிக்கைத் தவிர உள்ள நான்கு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள். மேலும் ஈசா நபி வருவார்கள் என்பது உறுதியானதாக இருப்பதால் இந்த ஹதீஸை சொற்பொருளில் ஏற்க முடியாது.

ஆறாவது ஹதீஸ் : "இறைவா! இந்த இஸ்லாமிய கூட்டத்தை நீ அழித்துவிட்டால் நீ ஒருபோதும் வணங்கப்படமாட்டாய்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'ஹஸ்ரத் ஈசா நபி வருவார் என்பதை இந்த ஹதீஸ் மறுப்பதாகவோ இனிமேல் எந்த நபியும் வரமுடியாது என்றோ இந்த ஹதீஸ் கூறுவதாக அறிவுள்ள எவரும் கூறமாட்டார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால் இன்றைய உலகில்  இல்லாத ஒரு வாதத்தை முன்வைத்து அது சரியா என அல் ஜன்னத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அக்கேள்வியில் குறிப்பிட்டிருந்த வசனங்களுக்கு, திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் எதிரான விளக்கத்தை அல் ஜன்னத் முன்வைக்கிறது.

அடுத்து உலகில் எல்லா முஸ்லிம்களும் நம்பும் ஒரு கொள்கையாகிய ஈசா நபி அவர்களின் வருகையை மறுக்கும் வகையிலான கருத்தை அல் ஜன்னத் கூறுகிறது.

அதற்கு சான்று எனக்கூறி அல் ஜன்னத் காட்டியுள்ள ஹதீஸ்களுள் எதுவும் அல்  ஜனனத்தின் கருத்தை உண்மைபடுத்தவில்லை.

கற்பனைக் கொள்கைகளைக் கைவிட்டு திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படியிலான உண்மைகளைத் தெரிந்து, உணர்ந்து, அவற்றின்படி தமது நம்பிக்கைகளை அமைத்துக் கொள்ள எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.