அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

நூல்களை சுமக்கும் கழுதைகள் - அல்-ஜன்னத் ஏட்டிற்கு பதில்


'கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை' என்பார்கள். ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்ய இயலாத அறிவிலிகள் குறித்து இவ்வாறு கூறப்படுவதுண்டு.

தவ்ராத் சுமத்தப்பட்டு, ஆனால் அதன்படி செயல்படாதவர்களின் உவமை, புத்தகங்களை சுமக்கும் கழுதையின் உவமையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் அடையாளங்களை ஏற்க மறுக்கும் மக்களின் உவமை மிகக் கெட்டதே. அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை (62:6)

என்று திருக்குரானில் இறைவன் கூறுகின்றான். இறை அடையாளங்களை மறுக்கின்றவர்களை இறைவன் இங்கு கழுதையோடு ஒப்பிடுகின்றான். அத்தகையோர் நூல்களைக் கட்டி மாரடிப்பார்களே தவிர அவற்றில் காணப்படும் கருத்துக்களை குறித்துச் சிந்திப்பது இல்லை. என்பதும் இதில் அடங்கியுள்ளது.

அல் ஜன்னத் மாத இதழின் ஆசிரியரும் இத்தகையோரில் ஒருவர் என்பதை அவருடைய அண்மைக்கால எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு முன்னுள்ள வசனத்தில் பிற்காலத்தில், அரபியல்லாத மக்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றுவது குறித்து கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து வியப்படைந்து அக்காலத்திலேயே வினவப்பட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள், ஈமான் கார்த்திகை நட்சத்திரமளவில் சென்று விடும் போது அதனை திரும்பக் கொண்டு வரும் ஒருவரைக் குறித்தே இங்கு கூறப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்கள். இந்த விளக்கமும் நிகழ்ச்சியும் சஹீஹுள் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அரபு மக்களிடையே தோன்றி உலகுக்கே வழி காட்டினார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றிய சமுதாயம் பிற்காலத்தில் வீழ்ச்சியுறும். அவர்களிடமிருந்து ஈமான் அகன்று விடும். அப்போது ஒருவர் தோன்றுவார். முஸ்லிம்களிடம் இருந்து மறைந்து விட்ட ஈமானை மீண்டும் அவர் நிலைநாட்டுவார். அது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் வந்தது போன்று இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்து விடும்.

இறைவனின் இந்த வாக்குறுதியும் அதற்க்கு விளக்கமாக விளங்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் இக்காலத்தில் நிறைவேறியுள்ளன. இஸ்லாத்தின் எழுச்சியை மீண்டும் உலகில் நிலைநிறுத்த ஒருவர் தோன்றி அந்த மகத்தான பணிக்கு அடித்தள மிட்டுச் சென்றுள்ளார். அவர் தாம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.

இந்த மகத்தான இறையடையாளத்தை மறுத்து தம் மனம் போன போக்கில் உளறிக் கொண்டிருப்பவர்களைக் குறித்தே நூல்களைச் சுமக்கும் கழுதைகள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதுவும் அவர்களை தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களுடன் ஒப்பிட்டுச் சொல்கிறான். ஏனெனில் அவர்கள் இறைதூதரான ஈசா (அலை) அவர்களை மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் தவ்ராத்தில் இடம் பெற்றிருந்தும் அந்த மாநபியை மறுத்தார்கள். அதனால் அந்த யூதர்கள் நூகளைப் பயனின்றிச் சுமக்கின்ற கழுதைகள் போலானார்கள்.

இதனை ஒரு பாடமாக இறைவன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றான். உங்களிடத்திலேயே திருக்குர்ஆன் உள்ளது. அதிலுள்ள வசனங்களைக் குறித்துச் சிந்தியுங்கள். அதிலுள்ள முன்னறிவிப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். இறையடையாளன்களைக் கண்டு கொள்ளுங்கள். இறைவன் புறமிருந்து வந்தவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் திருக்குர்ஆன் எனும் அற்புத நூலை வெறுமனே சுமக்கும் கழுதைகள் ஆவீர்கள்.

இந்த எச்சரிக்கையைப் சிந்தித்து உணராத அல் ஜன்னத் ஆசிரியரைப் போன்றோர் இறைவன் புறமிருந்து வந்தவரையும் அவருக்குச் சான்றாக வெளிப்பட்ட இறையடையாளங்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். மறுப்பது மட்டுமே இவர்களின் வாடிக்கையான வழியாகி விட்டது. அடிக்கடி கோயம்புத்தூரில் அஹ்மதிகளுக்கும் இவர்களுக்கும் நடைபெற்ற விவாதம் பற்றி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். வாழ்க்கையில் இவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை என அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கும் களியக்காவிளை விவாதத்தில் சுன்னத்வல் ஜமாத்தினர் வேட்டு வைத்தார்கள். இவர்கள் அந்த விவாதத்தில் நாங்கள் காதியானிகளோடு விவாதம் செய்தோம் என்று கூறினார்கள். அதற்க்கு அஹ்மதியா ஜமாஅத்தின் விரோதிகளான சுன்னத்வல் ஜமாத்தினர் பதில் கொடுத்தனர். 

இவர்கள் எவ்வளவுதான் அஹமதிய்ய ஜமாத்திற்கு எதிராக செயல் பட்டாலும் உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.

ஆனால் அந்த விவாத அரங்கில் இவர்கள் என்ன செய்தார்கள்? மறுத்துக்கொண்டே இருந்தார்கள். இவர்களின் கொள்கைக்கு முறையான ஆதாரங்களைக் காட்டினார்களா? மனிதராகப் இம் மண்ணுலகில் பிறந்த ஈசா நபி, மரணத்தை வென்று இன்றும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற இவர்களின் மூடநம்பிக்கைக்கு என்ன சான்றை எடுத்து வைத்தார்கள்? இறைவனுடை பண்பை ஈசா நபி அவர்களுக்கு கொடுத்து இணைவைக்கும் செயலில் ஈடுபட்டார்கள். உணவே உண்ணாத உடலை நாம் இறைத்தூதர்களுக்கு கொடுக்கவில்லை என்று இறைவன் திருக்குரானில் கூறியதற்கு நேர்மாற்றமாக ஈசா நபி அவர்கள் உணவே உண்ணாமல் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறினார்கள். இறைவன் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து "உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் நிலைத்து வாழக்கூடிய வாழவைக் கொடுக்கவில்லை என்று திருக்குரானில் கூறுகின்றான். ஆனால் இவர்கள் ஈசா நபி வானத்தில் நிலைத்து வாழ்கிறார்கள் என்று கூறி இறைவனுக்கு இணைவத்ததுமல்லாமல் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தினார்கள். இதுதான் இவர்கள் கோவை விவாதத்தில் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனை.

இறையருளாக திருக்குர்ஆன் கூறும் நபித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது, அதுவும் உலகுக்கே இறையருளாக வந்த ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது என்ற இவர்களின் பேதமைத்தனமான கொள்கைக்கு ஏதேனும் ஒரு தெளிவான ஆதாரத்தை எடுத்து வைத்தார்களா? நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறிக்கொண்டு, இறுதி காலத்தில் ஈசா நபி வருவார்கள் என்று விவாதம் செய்து இறுதி நபிக் கொள்கையை அவர்களே மறுத்தார்கள்.

அஹ்மதிகள் அடுக்கிக் கொண்டு போன ஆதாரங்களை மறுத்துக் கொண்டே இருந்ததைத் தவிர கோயம்புத்தூர் விவாத அரங்கில் இவர்கள் என்ன சாதித்தார்கள்.

மறுப்பது சாதனையாகிவிடுமா? இப்படித்தானே யூதர்களும் கிருஸ்தவர்களும் நபி(ஸல்) அவர்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நாத்திகர்கள் இறைவனையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருக்குரானையும் நபி மொழிகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு இறையடையாளன்களை மறுக்கும் இவர்களை, அந்த இறைமறையின் கருத்துக்கேற்ப 'நூல்களை சுமக்கும் கழுதைகள்' எனக் கூறுவதில் என்ன தவறிருக்க முடியும். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.