அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 12, 2012

ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் நஜாத் ஆசிரியரோ முதலில் உயர்த்துதல் நிகழ்ந்துவிட்டது மரணம் பின்னால் நிகழும் என்கிறார். இந்த தலை கீழ் பாடத்தை அறிவுள்ள எவரும் ஏற்க்கமாட்டார். இப்படி திருமறை வசனத்தை புரட்டுவதோடு நின்றுவிடாது அதன் சொற்களுக்கு தவறான அர்த்தமும் நஜாத் ஆசிரியர் தருகிறார். மேற்கண்ட வசனத்திற்கு இவர் தரும் அர்த்தத்தை பாருங்கள். "ஈஸாவே நான் உம்மைக் கைப்பற்றுவேன் இன்னும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன்" என அவ் வசனத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல இப்போதுள்ள திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பாளர்களும் இவ்வாறே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் உள்ள இமாம்களும் இஸ்லாமிய நல்லறிஞ்சர்களும் நாம் மொழி பெயர்த்துள்ள வண்ணமே மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களில் கூட "ரூஹை (உயிரைக்) கைப்பற்றுதல் " என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க இந்தச் சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்றதொரு வினோதமான அர்த்தத்தை இவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றார்கள்?

பதஹுல் பயான் எனும் விரிவுரை நூலில் காணப்படுவது போன்று உண்மையில் இது, ஈஸா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கையை தமது உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட கிறிஸ்தவ வழி வந்த முல்லாக்கள் உருவாக்கிய அனர்த்தமேயொழிய அந்தச் சொல்லுக்கு இவர்கள் தரும் அர்த்தம் இல்லவேயில்லை!

'ரஃப அ' என்ற சொல்லுக்கு உடலுடன் உயர்த்துதல் என்ற பொருள் உண்டு என்பதற்கோ 'தவஃப்பி' eன்ற சொல்லுக்கு 'உடலைக் கைப்பற்றுதல்' என்ற பொருள் உள்ளது என்பதற்கோ அரபி மொழி இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டையோ அகராதியிலிருந்து ஆதாரத்தையோ தராது வெறும் குதர்க்க வாதங்களால் குட்டையை குழப்புகிறார் நஜாத் ஆசிரியர்.

'ரஃப அ' என்ற அரபிச் சொல் குரானிலும் ஹதீதிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்து பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை " என (பக்கம் 16 இல்) கூறும் அவர், ஈசா (அலை) வர்களைப் பொறுத்தவரை அச் சொல் "உடல் உயர்வு" என்று பொருள் படும் என்று கூறுகிறார். இதை யார்தான் ஏற்க்க முடியும்? ஏனையோரைப் பற்றி ஏன், எம்பெருமானார் (ஸல்) வர்களைப் பற்றி கூட குறிப்பிடப்படும் போது அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தமாம். ஈசா நபியைப் பற்றி வரும் போது மட்டும் அதற்க்கு தனி அர்த்தமாம். இது போன்ற வாதத்தை படிப்பற்றவன் கூட நம்பமாட்டானே !

ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வழியில்லாத காரணத்தால் ஈசா நபி அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதற்கு நாம் காட்டிவரும் ஆதாரங்களை நஜாத் ஆசிரியர் மறுக்க முயல்கிறார். முதலில் இவர் தமது நம்பிக்கைக்கு தெளிவான ஆதாரங்களால் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே நம்மால் காட்டப்படும் ஆதாரங்களை மறுக்க முயல வேண்டும். ஆனால் அவரோ ஆதாரம் 2,3 என தலைப்பிட்டு நம்முடைய ஆதாரங்களை தன் மனம் போல் மறுக்கின்றார். இது விவாத முறையன்று.

என்றாலும் இல்லாத சான்றை இவரிடம் கேட்பதில் என்ன பயன்? எனவே இவரின் மறுப்புகளை இனி பார்ப்போம்.

ஈசா நபி (அலை) அவர்களின் இயற்க்கை மரணம் குறித்து திருக்குரானில் காணப்படும் வசனங்களில் ஒன்று இவ்வாறு அமையப்பற்றுள்ளது :-

மர்யமின் மைந்தர் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை நிச்சயமாக (அவரைப் போன்ற) தூதர்கள் அவருக்கு முன்னால் காலஞ்சென்று போனார்கள். மேலும் அவருடைய தாயார் ஓர் உண்மைமிக்கப் பெண்ணாவார். அவர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். (இவற்றிலிருந்து) அவர்கள் (ஈசா நபியை இறைவனாகக் கருதுபவர்கள்) எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள் என்பதை காண்பீராக. (5:76)

நஜாத் ஆசிரியர் மறுப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள நூலான "ஈசா நபி (அலை) அவர்களின் மரணம்" என்ற நூலில் இத் திருக்குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. :-

இந்த ஆயத்தில் ஈசா நபியின் இறப்பு பற்றி மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இங்கு முதலாவதாக ஈசா நபி ஓர் இறைத்தூதறேயன்றி வேறில்லை என்று கூறியதற்குப் பிறகு அவருக்கு முன் தோன்றிய எல்லா நபி மார்களும் காலஞ்ச சென்று போனார்கள் என்று கூறப்படுகிறது. இது ஈசா நபியின் மரணத்தை உறுதி செய்யும் மறுக்கயியலாத ஒரு சான்றாகும். திருக்குரானின் இந்த நடைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஸைத் ஒரு மனிதனேயன்றி வேறில்லை. எல்லா மனிதர்களும் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினால் ஸைத்தும் மண்ணினால் படைக்கப்பட்டவர் என்பதே அதற்குப் பொருள். அது போன்று ஈசா நபியின் மரணம் மேற்கண்ட ஆயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை என்றால் ஈசா நபியை ஏனைய இறைத் தூதர்களிலிருந்து வேறுபட்டவராக இங்கு காட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் தொடர்ந்து, ஈசா நபியின் தாயார் புனிதவதியாக இருந்தார். எனவும் அவர்களிருவரும் உணவருந்தி கொண்டிருந்தார்கள் எனவும் விளக்குகின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஈசா நபி மரணிக்காது உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையானால் அவரைப் பற்றி அவர் உணவருந்திக்கொண்டிருந்தார் என இறந்த காலத்தில் ஏன் கூறப்பட்டிருக்கிறது? அவ்வாறில்லாமல் அவரையும் அவரது தாயாரையும் இவ் விஷயத்தில் வேறு படுத்தியல்லவா கூற வேண்டும். அதாவது மர்யம் (அலை) அவர்கள் உணவருந்தியிருந்தார்கள் என்றும் ஈசா நபி உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றுமல்லவா கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை. அவர்கள் இருவரும் உணவருந்தியதை கடந்த கால நிகழ்ச்சியாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தெளிவான விளக்கத்திற்கு நஜாத் ஆசிரியரின் விமர்சனத்தைப் பாருங்கள்.

"காதியானிகளின் இந்த வினோதமான விளக்கத்திற்கு காரணம் ஒன்று அவகளின் விவேகமின்மையாக இருக்கவேண்டும்: அன்றி அறிந்தும் மக்களை மடையர்களாக்கி தங்களின் சுய நலத்தைப் பேணிக்கொள்ளும் வேடமாக இருக்க வேண்டும். ஈசா (அலை) இறந்தது விட்டார்கள் என்றால் அல்லாஹ் அதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவித்திருக்கலாமே! இப்படி சுற்றி வளைத்துச் சொல்லி காதியானிகளை திண்டாட விட்டிருக்க்வேண்டியதில்லையே!"

நஜாத் ஆசிரியர் இறைவனுக்கே கட்டளையிடுவார் போலிருக்கிறது. யூத இனமான இஸ்ரவேலருக்குத் தூதராக வந்த ஒருவர் இறக்காமல் இருக்கிறார் என இவர் முட்டாள்தனமாக நம்புவாராம். அவ்வாறு இல்லையென்று தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி சுற்றி வளைக்காமல் இறைவன் அறிவிக்க வேண்டுமாம். மனிதானாகப் பிறந்த எவனுக்கும் ஒரு குறுகிய வாழ்விற்குப் பிறகு இறப்பு ஏற்ப்படும் என்பது மடையனுக்கு கூட சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஈசா நபி ஓர் இறைத்தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதரே எனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. நஜாத் ஆசிரியர் பேதமைத்தனமாக நம்புவது போன்று ஈசா நபி உயிருடன் இருந்தால்தான் 'அந்த அற்புதமான விஷயம் பற்றி அல்லாஹ் திருக்குரானிலே தெளிவாக அறிவித்திருக்க வேண்டும்.

நம்மிடம் வந்து ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நாம் இவ்வாறு கூறுவது வழக்கம். மனிதன் இறப்பதென்பது இயற்க்கை நியதி அதற்க்கு ஆதாரம் காட்டவேண்டியதில்லை. ஆனால் மனிதராகிய ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறக்காது இருக்கிறார் என்று நீங்கள் கூறுவதென்றால் அதுவே வினோதம். அதற்க்கு நீங்கள்தான் ஆதாரம் காட்டவேண்டும்.

எனவே நஜாத் ஆசிரியரிடம் கேட்போம் ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத சுற்றிவளைக்காத தெளிவான ஆதாரத்தைத் தாருங்கள். இவ்வாறு அவரைக் கேட்க நஜாத் ஏட்டின் ஒவ்வொரு வாசகரும் கடமைப் பட்டவராவார்.

ஏனெனில், ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்ற கொள்கை தவ்ஹீதிற்கு எதிரானது. எவ்வாறெனில் மேற்கண்ட இறைவசனத்திலும் இன்னும் பல வசனங்களிலும் இறைவன் தனக்கு இணையாக வணங்கப்படுபவர்கள் எல்லாம் மரணித்துப் போனவர்கள் என்பதை விளக்கி தனது "தவ்ஹீத்" நிலையை எடுத்துக் காட்டுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைவன் ஈசா நபியை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக - உணவு உண்டு வாழ்ந்த ஒருவராக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும் அவர்ட் சாதாரண மனிதரைப் போன்று "உணவருந்திக் கொண்டிருந்தார்"என்று கூறி அவர் இறந்து போனார் என்பதை மீண்டும் உறுதி செய்து அவர் கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கின்றான்.

திருக்குரானில் இறைவன் இவ்வாறும் அறிவித்துள்ளான் :-

அல்லாஹ்வைத் தவிர்த்து யாரை அவர்கள் (இணைவைப்பவர்கள்) அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் படைக்கவில்லை ஆனால் அவர்கள் தாம் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணித்துப் போனவர்கள்: உயிருள்ளவர்கள் அல்ல மேலும் அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21,22)

இந்த வசனத்தில் இறைவன் தனது ஏகத்துவ நிலைக்குச் சான்றாக கடவுளாக அழைக்கப்படுகின்றவர்களின் மரணத்தையே கூறுகின்றான். இன்று பெரும் பான்மை மக்களால் கடவுளாக அழைக்கப்படுகின்றவர் ஈசா நபி ஆவார், அப்படி அழைக்கப்படுகின்றவர், மரணித்துப் போனவர் என்றும் மரமண்டைகளில் ஏறும் வண்ணம் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் இறைவன் கூறுகின்றான். ஆனால் நஜாத் ஆசிரியரைப் போன்றவர்கள், இல்லை இல்லை ஈசா நபி உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறி இறைவனின் இந்த வார்த்தைகளை மறுக்கின்றனர். இது தவ்ஹீதிற்கு இறைவன் தரும் சான்றை மறுப்பது மட்டுமல்ல தவ்ஹீதையே மறுப்பதாகும். எனவே ஈசா நபி உயிருடன் இருக்கிறான் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற ஒன்றாகும். ஈசா நபி பிரச்சனை அவசியமற்றது என்று கூறுபவர்கள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும். நஜாத் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் முடிவு காண நஜாத் ஆசிரியரை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் தம்மை தவ்ஹீது வாதிகள் என்று வாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இவ்வாறு வரைகிறார்:- "இந்த இறை வசனம் மூலம் ஈசா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூய உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவர்களா? மரணமற்றவர்களாயின் அல்லாஹ்விற்கு இணையாகுமே என காதியானிகள் கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம்." இவ்வினாவிற்கு விளக்கமாகவே, "ஈசா (அலை) அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணமில்லை என்று எண்ணுகிறீர்களா? மற்ற நபிமார்கள் இறந்ததுபோல் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே."

நாம் தந்துள்ள தெளிவான சான்றை இவர் எப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து மறுக்கிறார் பாருங்கள். ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என ஆரம்பகால முஸ்லிம்கள் நம்பியிருந்தால்தானே அவர் மரணித்துப் போவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்க முடியும்? எனவே ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்ற நம்பிக்கை ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருந்தது என்பதற்கு முதலில் இவர் ஆதாரம் காட்ட வேண்டும் அதன் பிறகே இதுபோன்று வாதிக்கவேண்டும்.

மேற்கண்டவாறு கூறுவதன் மூலம் ஆம் திருவசனம் ஈசா நபியின் மரணம் பற்றியது என்பதை நஜாத் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம் அவரோ இன்மேல் தான் நிகழும் என்கிறார். இந்த கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆன் என்ன தீர்ப்பளிக்கிறது பார்ப்போம்.

முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் (3:145)

ஈசா நபி நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஒரு நபி, அத்தகு நபிமார்கலேல்லாம் காலஞ்சென்று போனார்கள் என தெளிவுபடுத்துகிறது இந்தத் திருவசனம். இந்த வசனத்தைப் படித்த, அறிவுள்ள எவரும் ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நஜாத் ஆசிரியரைப் போன்ற குழப்பவாதிகளோ திருக்குர்ஆன் ஆயத்தை திரித்துக் கூறி மக்களை ஏமாற்றவே செய்வர். ....."தூதர்கள் காலஞ்சென்று போனார்கள்." என்று இருப்பதை "தூதர்கள் பலர் சென்று போனார்கள்" என்று இல்லாததை இட்டுக் கட்டி நஜாத் ஆசிரியர் (பக்கம் 24 இல்) கூறுகிறார். இந்த ஆயத்தில் 'பலர்' என்று பொருள்படும் பஃள என்ற சொல் இல்லவே இல்லை. இதிலிருந்து யார் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்பதை வாசகர்கள் தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஈசா நபி அவர்கள் இறந்து போனது சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவாகியிருக்கையில் அதனை ஏற்காது, இந்த 3:144 வசனம் இறங்கும் போது நபிபெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தது போலவே 5:75 வசனம் இறங்கும் போது ஈசா நபி உயிரோடு இருந்தார் என்ற ஒரு அபத்தமான ஒரு வாதத்தை நஜாத் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். ஈசா நபிக்கு முன்னால் உள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனத்தை படித்த பிறகும் ஈசா நபி இறந்தார்களா என்ற சந்தேகம் எழுமானால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனம் அந்தச் சந்தேகத்தை அடியோடு போக்கிவிடுகிறது.

இது குறித்து அல்லாஹ் மீண்டும் தெளிவு படுத்தியிருப்பதை பாருங்கள்.

மனிதர்களேயன்றி வேறெவரையும் நாம் உமக்கு முன்னர் (தூதர்களாக) அனுப்ப வில்லை, அவர்களுக்கே வஹீ அனுப்பியிருந்தோம் .......... ......... மேலும் உணவருந்தாததும் நிலைத்து வாழக்கூடியதுமான உடலை நாம் அவர்களுக்கு தரவில்லை. (21:8,9)

இதிலிருந்து ஈசா நபி உணவருந்தாது ஒரு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார் என்ற நஜாத் ஆசிரியரின் வாதம் முழுக்க முழுக்க தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தையும் இதற்க்கு முன்னால் குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களையும் படித்தறிந்த பிறகும் ஒருவர் ஈசா நபி மரணிக்கவில்லைஎன வாதிப்பாரேயானால் அவர் ஈசா நபியை இறைதூதர் என்ற நிலைக்குமேல் உயர்த்துகிறார் என்பதே அதற்குப் பொருள். அவ்வாறு செய்கின்றவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுப்பவரும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை அவமதிப்பவருமேயாவார். அத்தகைய ஒருவராகவே நஜாத் ஆசிரியர் காணப்படுகிறார்.

"உமக்கு முன்னர் நாம் எந்த மனிதருக்கும் நீண்ட கால வாழ்வு அளிக்கவில்லை. (முஹம்மது நபியே) நீர் மரணித்து இவர்கள் நெடுங்காலம் வாழ்வதா?" (21:25)

என இறைவன் கேட்கிறான். ஆனால் நஜாத் ஆசிரியரோ மானமும், வெட்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மரணித்திருக்க ஈசா நபி இன்னும் உயிரோடு இருப்பதாக வாதிடுகிறார். இப்படி வாதிடுபவர்கள் ஒரு வேளை கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக இருக்கவேண்டும்.

நாம் இதனை மிகைப்படுத்திக் கூறவில்லை. நமக்கு எழுந்துள்ள சந்தேகம் நியாயமானதுதான். நஜாத் ஆசிரியர் இது குறித்து எழுதியிருப்பதை நீங்கள் படித்தல் உங்களுக்கும் அந்த சந்தேகம் எழும். அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"தூதர்களில் சிலரைச் சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறோம்." என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்றெல்லா நபி மார்களையும் விட எல்லா விஷயங்களிலும் உயர்த்தியிருப்பதாகச் சொல்லவில்லை. "

இதிலிருந்து நஜாத் ஆசிரியரின் ஈமானில் கோளாறு உள்ளதை உணரலாம். அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விட எல்லாவகையிலும் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த மானபியை முழுமையாகப் பின்பற்றிய மக்கள் எல்லா மக்களையும் விட உயர்ந்தவர்கள் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவு படுத்தியிருக்கிறது. கீழ்வருவன அதற்க்கு சான்றுகளாகும்.

காத்தமுன் முன்னபிய்யீன் - எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்கள்- (சூரா அஹ்சாப்)

யாசீன் - தலைவரே -(சூரா யாசீன்)

புகழக்கூடிய இடத்துக்கு உரியவர் (மக்காமே மஹ்மூத்) - (சூரா பனி இஸ்ராயீல்)

உலக முழுவதிற்கும் ஒரு அருட்கொடை (சூரா அன்பியா)

உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட ஒரே இறைத்தூதர். (சூரா அக்ராப்)

இவ்வாறெல்லாம் நபி(ஸல்) அவர்களை மேன்மைப் படுத்திக் கூறியுள்ளபோது இந்த மேதாவி அதிலும் சந்தேகத்தைக் கிளப்புகிறார். இவர்கள் தான் மக்களை ஆலிம்களாக்குகிறவர்களா?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.