அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 11, 2012

ஈசா (அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்-1


தமிழக முஸ்லிம்களிடையே சிலர், தம்மை தௌஹீது வாதிகள் என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் இவற்றின் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களென்றும் பறை சாற்றி சிறிது மதிப்பு பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் தாமும் அதே குழப்பக்கார குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அது மட்டுமன்று, இவர்களை, ஏனைய ஆலிம்சாக்களிலிருந்து மாறுபட்டவர்களாக, மார்க்க மேதைகளாக கருதிவந்த மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இவர்கள் தமது பத்தாம் பசலித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

அந்-நஜாத் நவம்பர் இதழில் வெளியான 'ஈசா (அலை) மரணிக்கவில்லை, ஆயினும் மரணிப்பவர்களே' என்ற கட்டுரை இதனை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஈசா (அலை) அவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் உள்ளார்கள் என்ற மூடநம்பிக்கை மட்டுமல்லாது, கற்பாறைக்குள்லிருந்து நிறை சூல் ஒட்டகம் வெளிவந்து குட்டி ஈன்றது. மூசா நபி காலத்தில் இறந்தவன் உயிர்பெற்றான், அதுவும் மாட்டின் அங்கத்தினால் அடிபட்டதும் உயிர்பெற்றான். (மாட்டையே அக்கால மக்கள் வழிபட்டனர். அந்த மாடு ஒருவனை உயிர்பித்தது என்கிறார்களோ என்னவோ). குகைவாசிகளின் உயிர் கைப்பற்றப்பட்டு முன்னூறு ஆண்டுகள் தூங்கினர் என்பன போன்ற 'கஸ்ஷுல் அன்பியா' கட்டுக் கதைகளை ஏற்பதில் இவர்கள் ஏனைய முல்லாக்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் மேற்கண்ட கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

இவற்றிக்கெல்லாம் மேலாக, இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளனரா என்ற சந்தேகத்தை இவர்களின் வாசகர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, "உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதருக்கும், கொடுக்கப்படாத சில தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள். என்று திருக்குரானே சான்று பகர்கின்றது" என்று இவர்கள் வரைந்துள்ளதைக் கூறலாம். இன்னும் கொஞ்ச நாள் சென்றால், "திருக்குரானை விட ஏனைய நூற்களை விட பைபிள் தனிச் சிறப்புகளை உடையது" (நவூதுபில்லாஹ்) எனக்கூசாமல் இந்த "மாமேதைகள்" கூறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு வாசகர்வட்டமும் ஒரு புரவலர் கூட்டமும் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

ஆனால், 'சுன்னத்வல் ஜமாஅத்' எனத் தங்களைக் கூறிக் கொள்ளுபவர்களைச் சார்ந்த ஆலிம்சாக்களாகட்டும், நஜாத், ஜன்னத் இவற்றின் மெத்த படித்த ஆலிம்சாக்களாகட்டும் இதனை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை! இத்தகையவர்களை குறித்தே திருக்குர்ஆன்,

'அவர்களின் பெரும்பாலானவர்கள் ஊகங்களையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக ஊகங்கள் உண்மைகெதிராக எந்தப் பயனும் அளிப்பதில்லை . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (10:37)

அதுமட்டுமன்று, திருக்குரானை புரிந்து கொள்வதற்கு அரபி மொழியறிவு மட்டும் இருந்தால் போதாது. 'தக்வா' என்னும் இறையச்சம் இன்றியமையாதது. இதனையும் திருக்குரானே எடுத்துரைக்கிறது. (2:3)

நஜாத் ஆசிரியரோ படு சுத்தம்! இவரிடம் 'தக்குவாவும்' இல்லை அரபி மொழியறிவும் இல்லை. இவருக்கு இறையச்சமிருந்தால் மேற்கண்ட கட்டுரையில் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடி இருக்கமாட்டார். நயவஞ்சகர்கள் என்றும் வழிகேடர் என்றும் நம்மீது வசைபாடி இருக்கமாட்டார்.

இவருடைய ஏளனத்திற்கும், ஏச்சுகளுக்கும், அவதூறுகளுக்கும் நீண்ட மறுப்புகள் எழுதப்போவதில்லை. மாறாக இவருடைய ஏளனத்திற்கு,

"அவர்களுடைய ஏளனம் அவர்களையே சூழ்ந்துகொள்ளும்" (6:11)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையே பதிலாகாக் கூறுகின்றோம். இவருடைய வசைமொழிகளை,

"எனது துக்கத்தையும், வேதனையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்". (12:87)

என்ற திருமறை வசனத்திற்கேற்ப இறைவனிடமே விட்டுவிடுகிறோம். அவதூறுகளுக்கு,

"லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்"

"பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

என்ற ஒரே பதிலை கூறுகின்றோம்.

நஜாத் ஆசிரியருக்கு அரபி மொழியறிவு இருந்தால் மேற்கண்ட கட்டுரையில், அர்த்த மற்ற உளறல்களை நிச்சயமாக தவிர்த்திருப்பார். அவருக்கு அரபி மொழியறிவு இல்லை என்பது ஊரறிந்த விஷயம், ஏன் அதனை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார் நஜாத் அக்டோபர் இதழில்! ஆனால் அவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் அந்த ஆலிம்சா பெருந்தகையினருக்கும் அறபி மொழியறிவு இல்லை போலிருக்கிறது. அந்த மண்குதிரையை நம்பி இவர் ஆற்றில் இறங்கியிருக்க வேண்டாம், ஆழம் தெரியாது காலை விட்டு அவதிப்பட்டிருக்கவும் வேண்டாம்.

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூறுகின்றானாம். ஆலு இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." நஜாத் ஆசிரியர் அதே கதைக்கு "ஈசா நபி அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டார்கள்" என்று வேறு தலைப்பு தருகிறார். மிகக் கெட்டிக்காரத்தனமாக எழுதிவிட்டதாக எண்ணம் அவருக்கு

ஈசா நபியைப் பற்றி அவர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்பட்டார்கள் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள்) மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் (மீண்டும் பூமியில்) வாழ்வார்கள் என்றெல்லாம் நஜாத் ஆசிரியர் வரைந்துள்ளார். (பக்கம் 8)

ஆனால் இவையெல்லாம் அவருடைய ஊகங்களே. அவருடைய கட்டுரை நெடுகிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று அவருடைய ஊஹங்களை எடுத்துவிடுகிறார். இந்த லட்சணத்தில் இவர், "காதியானிகள் நம்மவர்களின் ஊகங்களையும் சுய கருத்துக்களையும் எளிதாக முறியடித்து வெற்றிவாகை சூடிக்கொள்கின்றனர்." (பக்கம் 5) என ஏனைய ஆலிம்சாக்களை சாடுகின்றார்.

திருக்குர்ஆன் நபி மொழி இவற்றை அறிந்து திட்டவட்டமாகக் கூறுவதை விட்டு வெறும் ஊகங்களையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுபவர்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"வெறும் ஊகங்களையே அன்றி உண்மையை அவர்கள் பின்பற்றுவதில்லை. கற்பனையிலேயே அவர்கள் மூழ்கி இருக்கின்றனர்." (6:117)

"வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின் பற்றுவதில்லை. அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே." (10:67)

"அவர்களுக்கு இதைப்பற்றிய எவ்வித அறிவுமில்லை. அவர்கள் வீண் கற்பனை செய்பவர்களேயன்றி வேறில்லை.(43:21)

"ஈசா நபி உயிருடன் வானத்தில் உள்ளார்" என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் திருக்குரானில் இருந்து காட்டுங்கள் என்று சமாதான வழி இதழ் மூலமாக கேட்கப்பட்டது. பல ஆதாரங்கள் தந்துள்ளதாக நஜாத் ஆசிரியர் பீற்றிக் கொண்டுள்ளாரே தவிர ஈசா நபி உயிருடன் இருப்பதைத் தெரிவிக்கும் ஒரு ஆதாரத்தையும் அவர் தரவில்லை.

இந்த விஷயம் பற்றி இதுவரை அஹ்மதியா ஜமாத்துடன் வாதம் செய்த ஆலிம்சாக்கள் பாடிய அதே பல்லவியைத் தான் நஜாத் ஆசிரியரும் பாடி இருக்கிறார். ராகம் தான் சற்று வித்தியாசப்படுகிறது. இப்பிரச்சனை தோன்றிய நாள் முதல் இந்த ஆலிம்சாக்கள் எந்த ஆயத்தை தமது கட்டுக்கதைக்கு ஆதாரமாகக் கூறி இருந்தார்களோ அந்த ஆயத்தையே நஜாத் ஆசிரியரும் தமது ஆதாரமாக் முதலில் எடுத்து வைக்கிறார். (பக்கம் 8) இந்த ஆயத்தில் அவர் கூறும் அர்த்தப்படிப் பார்த்தால் கூட ஈசா நபி இயற்கையாக மரணித்துப் போகவில்லை என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஈசாவைக் கொன்றுவிட்டோம் என்ற யூதர்களின் வாதத்தை மறுத்து இறைவன் அவர்கள் அவரை கொல்லவில்லை என்று கூறியுள்ளானே தவிர அவர் இயற்கையாக இறந்தே போக வில்லை என்று கூறவில்லையே! அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டதாக இறைவன் கூறியிருப்பது எந்த வகையில் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஆகும்? இறைவனளவில் போகின்றவர்களெல்லாம் உயிருடனா போகிறார்கள்?

நஜாத் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் சரியான பொருளை கீழே தருகின்றோம்.

"அல்லாஹ்வின் தூதர், மர்யமின் மகனான ஈசா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள்(யூதர்கள்) கூறுகின்றனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவில்லை. ஆயினும் அவர் அவ்வாறு (சிலுவையிலிடப்பட்டவர் போன்று) தோற்றமளிக்குமாறு செய்யப்பட்டது. இதில் கருத்து வேடுபாடு உள்ளவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு ஊகத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களேயொழிய அது பற்றிய திட்டவட்டமான அறிவு அவர்களுக்கில்லை. அவர்கள் அவரை உறுதியாக கொலை செய்யவேயில்லை.

இதற்க்கு மாற்றமாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான். மேலும் அல்லாஹ் வல்லமையுள்ளவனும், அறிவுள்ளவனுமாவான். (4:158,159)

ஈசா நபி மரணிக்காது உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு இந்தத் திருவசனத்தில் என்ன சான்று உள்ளது என்பதை நஜாத் ஆசிரியர் கூறவேயில்லை. அதைவிடுத்து ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டார்களா இல்லையா, அடிக்கப்பட்டது ஈசா நபியா வேறொரு நபரா? என்பன போன்ற வாதத்திற்கு வாசகர்களைத் திசைத் திருப்புகிறார்.

இதற்காக ஆறு பக்கங்களை (பக்கம் 9 முதல் 14 வரை) செலவிட்டுள்ள இவர், இவருடைய கூற்றுக்கு உருப்படியான எந்த ஆதாரத்தையும் தராது சிலுவை சம்பவம் பற்றிய நமது கருத்துக்களை மறுக்கவும் நையாண்டி செய்யவும் முற்படுகிறார்.

முதலில் ஈசா நபி (அலை) அவர்கள் ஏனைய மக்களைப் போன்று மரணிக்கவில்லை என்பதற்கு இவர் ஆதாரம் தரவேண்டும்! அப்படி ஆதாரம் காட்டாத நிலையிலேயே இவர். ஈசா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். என்ற வசனத்தை எடுத்துக்காட்டி அதற்க்கு ஈசா நபி உடலுடனும், உயிருடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்று பொருள் தருகிறார்.

ஆனால், 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற சொற்றொடருக்கு உயிருடனும், உடலுடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார்கள் என்று பொருள் கொள்வதைவிட அபத்தம் வேறில்லை! ஈசா (அலை) எங்கிருந்து எங்கு உயர்த்தப்பட்டார்? அல்லாஹ் அளவிலென்றால் அல்லாஹ் உயரத்தில் உள்ளானா? 'சுவிசேஷகர் மாற்கு' (பைபிள் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களில் ஒருவர்) கூறி இருப்பது போன்று ஈசா நபி "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்" என நஜாத் ஆசிரியரும் கூற விழைகிறாரோ என்னவோ ! இப்படியே போனால் பாதிரி அப்துல்லா ஆத்தமைப் போன்று பாதிரி அப்துல் ஹக் போன்று இவரும் பாதிரி அபூ அப்துல்லா, ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை! ஆனாலும் நம்முடைய இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் அவ்வாறு ஆக மாட்டார் என நம்புவோம்.

"பல் ரப அவுல்லாஹு இலைஹி "அன்ற சொற்றோடரிலுள்ள 'ரபா ஆ' என்ற வினைச்சொல் அல்லாஹ்வை எழுவாயாகக் கொண்டு வரும்போது அதற்க்கு, ஆன்மீகமான உயர்த்துதல் என்று மட்டுமே பொருள் தரயியலும். மாறாக உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளும் தரலாம் என்பதற்கு எந்த எடுத்துக்காட்டையும் யாராலும் தர இயலாது. அத்தகையதொரு அர்த்தம் அந்தச் சொல்லுக்கு உள்ளது எனக்கூறும் நஜாத் ஆசிரியர், அதற்க்கான எடுத்துக்காட்டை திருக்குரானின் ஏனைய ஆயத்துக்கள், ஹதீஸ்கள், இப்பிரச்சனை எழுவதற்கு முன்னால் எழுதப்பட்ட தப்சீர்கள், அகராதிகள் இவற்றிலிருந்து காட்டவேண்டும்.

மனிதன் செயப்படு பொருளாகவும் அல்லாஹ் எழுவாயாகவும் கொண்ட ஒரு வசனத்திற்கு 'ரபா ஆ' என்ற பயனிலை வருமேயானால் அதற்க்கு ஆன்மீக உயர்த்துதல் என்ற ஒரே அர்த்தமே திருக்குரானிலும், ஹதீஸ்களிலும், இலக்கண நூல்களிலும், தப்சீர்களிலும் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக:-

திருக்குர்ஆன் வசனங்கள்:

"நாம் விரும்பியிருந்தால் அவரை (பல் அம்பாவூர் என்பவரை) உயர்த்தியிருப்போம். !" (7:176)

"அல்லாஹ் உங்களிடையேயுள்ள நம்பிக்கையாளர்களை உயர்த்துவான்." (58:11)

"நாம் அவரை (இத்ரீஸ் நபியை) மேலான, உயர்ந்த ஓர் இடத்திற்கு உயர்த்தினோம்." (9:58)

இந்தத் திருமறை வசனங்களில் எல்லாம் உள்ள 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு ஆன்மீகமான உயர்த்துதல் என்பதே பொருளாக தப்சீர்களில் தரப்பட்டுள்ளது.

நபிமொழிகள்

"ஓர் இறையடியார் பணிவை மேற்கொண்டால் இறைவன் அவரை ஏழாவது வானத்திற்கு உயர்த்திவிடுவான் ! (கன்சுல் உம்மால் பாகம் 7 பக்கம் 68)

"அல்லாஹ் சில சமுதாயங்களை இந்தத் திருக்குர்ஆன் வாயிலாக உயர்த்துகிறான். சிலரை தரம் தாழ்த்தவும் செய்கின்றான். (கன்சுல் உம்மால் பாகம் 1 பக்கம் 29)

இந்த நபிமொழிகளிலும் 'உயர்த்துதல் என்ற சொல் ஆன்மீக உயர்த்துதல் என்ற' பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.

தப்சீர் நூல்கள்

"அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை தன்னிடத்திற்கு அழைத்து தன்னளவில் உயர்த்தினான்." (தப்சீர் ஸாபி பக்கம் 113)

'ராபியுக்க இலய' என்ற வாக்கிற்கு உமது நற்செயல்களை என்னளவில் உயர்த்துவேன் என்பதே பொருளாகும். மேலும் நான் உமக்கு உயர்ந்த பதவியைத் தந்தருளுவேன் என்பதுமாகும். (தப்சீர் கபீர் அல்லாமா ராஸி பாகம் 2 பக்கம்691)

அகராதிகள்

எதனையாவது அணுகச் செய்வதற்கு 'ரபா ஆ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. - ஸிஹாஹ் ஜவ்ஹரி

அரசரிடத்து உயர்த்தப்படுதல் என்பது அரசருக்கு நெருக்கமானவன் என்பதே- அக்ரபுல் மவாரித்

ரபாஆ என்பது இழிவுபடுத்துதல் என்பதன் எதிர்ச்சொல் ஆகும். - தாஜுல் உரூஸ்

அர்ராபி- உயர்த்துகின்றவன் என்ற இறைவனின் குணப்பெயருக்கு நம்பிக்கையாளர்களுக்கு மீட்பளிப்பவன். இறைநேசர்களுக்கு தன்னை அடையும் வாய்ப்பினை வழங்குபவன் என்றெல்லாம் பொருள் படும். - லிஸானுள் அரப்

இவற்றிலிருந்தெல்லாம் ரபா ஆ என்பதற்கு ஆன்மீகமாக உயர்த்துதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் தரயியலாது என திட்டவட்டமாக புலனாகிறது. இனி "இலைஹி" என்ற சொல்லை கவனிப்போம்.

இறைவனளவில் உயத்துதல் என்பது சடப் பொருளான உடல் இறைவனிடம் செல்வது எனப் பொருள்படாது. ஏனெனில் இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லை. இது குறித்து திருக்குர்ஆன்.

அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் இருக்கின்றான். (6:4)

நீங்கள் எங்கெல்லாம் இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் அல்லாஹ் இருக்கின்றான். (2:115)

நாம் மனிதனுடன் அவனது உயிர்நாடிக்கருகே இருக்கின்றோம். (50:16)

என்றெல்லாம் கூறுகின்றது. இவற்றிலிருந்து இறைவனளவில் உயர்த்தப்படுதல் என்பதற்கு இறைவனிடத்திற்கு உடல் உயர்த்தப்பட்டது என்று எவ்வாகையிலும் பொருள்கொள்ள இயலாது என்பதயும், அப்படி பொருள் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்பதையும் உணரலாம்.

ஈசா நபி (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாக கூறி இருப்பது அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு எவ்வகையிலும் சான்றாக அமையாததைப் போலவே அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அறைந்து கொல்லப்படவோ இல்லை என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது. ஒருவர் சிலுவையில் அறையுண்டோ அல்லது வேறுவிதமாகவோ கொல்லப்படவில்லை. என்று கூறப்பட்டால். அவர் பின்னர் இயற்கையாகக் கூட இறக்கவே இல்லை என்பது அதன் பொருளன்று. மாறாக, அகால மரணம் அல்லது ஆபத்தான மரணம் அவருக்கு நேரவில்லை என்பது மட்டுமே அதற்குப் பொருள்.

மேற்கண்ட திருமறை வசனத்திலுள்ள 'வமகத்தலூஹு வமா சலபூஹூ' என்று இருப்பதை வெட்டிக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை என்று திரித்துக் கூறுவதாக நஜாத் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். அதன் பின்னர் அவரே கத்தல் என்பதற்கு வெட்டப்படுவது என்று பொருள் கூறிவிடுகிறார். இதிலிருந்து இவருடைய அரைவேக்காட்டுத் தனத்தை புரிந்துகொள்ளலாம்.

'சலபு' என்பதற்கு சிலுவையில் அறையப்படவில்லை என இவர் கூறும் பொருளே தவறானது. அஸ்ஸல்ப என்பதற்கு 'அல் கித்லத்துள் மக்ருபத்து' அதாவது சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்ற பொருளே லிஸானுல் அரப், தாஜுல் உரூஸ் ஆகிய அரபி மொழி அகராதிகளில் தரப்பட்டுள்ளது.

திருக்குரானின் பிற இடங்களில் காணப்படும் இச்சொல் நாம் சொல்லும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதர்களுடனும் போர் செய்தும் பூமியில் குழப்பம் செய்தும் கொண்டும் இருப்பவர்களுக்குரிய தண்டனை 'அன்யுகத்தலு'- அவர்கள் வெட்டப் படவேண்டும் அல்லது யுஸல்லபு - அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும். (5:34)

இந்த ஆயத்திலுள்ள 'யுஸல்லபூ' என்பதற்கு சிலுவையில் வெறுமே ஏற்றி வைப்பது என்று பொருள்கொள்ளயியலாது. மூஸா நபியின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜால வித்தைக்காரர்களை நோக்கி, 'லா உஸல்லி பன்னகும்' 'நான் உங்களை சிலுவையில் அறைந்து கொல்லுவேன்' என்று பிர்அவ்ன் கூறியதாக வருகிறது 20:72. இங்கும் சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்று பொருள்படும் வண்ணமே இவ்வசனம் அமையப் பெற்றுள்ளது.

சுருக்கமாக 'சலபூ' என்ற சொல் ஆங்கிலத்தில் Hanged என்ற சொல்லைப் போன்றது. Hanged என்றால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுதல் என்று பொருள்படும். அதுபோன்று சலபூ என்பதற்கு சிலுவையிலிடுதல் சிலுவையிலறைந்து கொல்லுதல் என்பதே பொருளாகும். எனவே வமா சலபூஹூ என்பதற்கு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று பொருள் கொள்வதே மிகச் சரியானது.

'இறைவனளவில் உயர்த்தப்படுதல்' என்பது உடலுடன் உயர்த்தப்படுவது அன்று என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 'வமா சலபூ' என்பதற்கு நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று சிலுவையில் அறையப்படவேயில்லை என்று வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அது கூட ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்க்குச் சான்றாகாது. சிலுவையிலிருந்து தப்புகின்ற ஒருவருக்கு மரணமே இல்லையா என்ன?

வெறும் குதர்க்கவாதம் செய்தும், நம்முடைய சான்றுகளை ஊகங்களால் மறுத்தும், தமது மூடநம்பிக்கையை நிலை நிறுத்தி விடலாம் என நஜாத் ஆசிரியர் கனவு காண்கிறார்.

'சாகடிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டவனை மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதாக எண்ணி எந்தப் புத்திசாலியும் அவனை சிலுவையிலிருந்து இறக்கிவிடமாட்டான்' என ஓரிடத்தில் குறிப்பிடும் இவர், ஈசா நபிக்கு பகரமாக வேறொருவனை அதிகாரிகள் சிலுவையில் அறைந்தனர் என இன்னொரு இடத்தில் கூறுகிறார். இவர் குறிப்பிடும் செயல் மட்டும் புத்திசாலித்தனம் ஆகிவிடுமா?

சிலுவையில் அறையப்பட்ட ஈசா நபி அதில் இறந்து விட்டதாகக் கருதி அதிலிருந்து இறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஈசா நபிக்கு பகரமாக வேறொருவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. காலமெல்லாம் தம்மோடு வாழ்ந்திருந்த ஈசா நபியை யூதர்களுக்குத் தெரியாதா என்ன? ஈசா நபியை சிலுவையில் அறைந்த கொல்ல வேண்டும் என்று வெறியோடு அலைந்த யூதர்கள் அவருக்கு பகரமாக வேறொருவன் அறையப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று கூறுவதை விட அபத்தம் வேறில்லை.

இப்படியெல்லாம் சிலுவை சம்பவத்தை போஸ்ட்மார்டம் செய்யும் நஜாத ஆசிரியர் ஒரு விஷயத்தை சிந்திக்க தவறிவிட்டார். நபிமார்களில் பலரை அவர்களின் எதிரிகள் கொன்றுவிட முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரையுமே இறைவன் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லை. அதுதான் போகட்டும் அவனுடைய நபிமார்களில் ஏன் மக்களில் தலை சிறந்தவர்களும் அவனுடைய அன்பிற்கும், நேசத்திற்கும் ஏனைய எல்லோரையும் விட மிக உயர்ந்தவர்களான அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் உயிருக்கு பல முறை அபாயம் நேரிட்டிருக்கிறது.

அத்தகு தருணங்களில் கூட இறைவன் அவர்களைத் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லையே! இவ்வாறிருக்க ஈசா நபியை மட்டும் அவன் எவ்வாறு உயர்த்திக் காப்பாற்றி இருப்பான்? இஸ்ரவேல் மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட ஈசா நபியை தன்னளவில் உயர்த்த வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு அளித்த பணியை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவிபுரிவதல்லவா அவனுடைய கடமை!

ஈசா நபி வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் என்பதும் இறைவனளவில் உயர்த்தப்பட்டார்கள் என்பதும் உண்மையில் பரமேறுதல் என்ற கிருஸ்தவ நம்பிக்கையின் மறுபதிப்பேயாகும். இதனை நாம் மட்டும் கூறவில்லை. இஸ்லாமிய நல்லறிஞ்சர்கள் பலரும் இவ்வாறே கூறியிருக்கிறார்கள். "பத்தஹுல் பயான் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் நாற்பத்தி ஒன்பதாம் பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

"ஈசா நபி முப்பத்து மூன்றாவது வயதில் உயர்த்தப்பட்டார்கள் என்று கூறப்படுவதில் நம்பக்கூடிய சான்று எதுவுமில்லையென்று ஹாபிலிப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸாதுல் மா ஆத்' எனும் நூலில் வரைந்துள்ளார்கள். இது கிறிஸ்தவர்களிடமிருந்து வந்த ஒரு கொள்கை என ஷாமி என்பவர் கூறுவது உண்மையே."

ஈசா நபிக்கு இறைவன், நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரையும் விட சிறப்பளித்தான் (நவூதுபில்லாஹ்) அவர்களைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் கூறி கிறிஸ்தவக் கொள்கைக்கு ஊட்டம் தருகிறார் 'நஜாத்' ஆசிரியர். இதற்குத்தான் இவர் தமது பத்திரிகைக்கு 'நஜாத்' - இரட்சிப்பு எனப்பெயர் வைத்தார் போலும்! இவர், இவர் பின்னால் போகின்றவர்களை 'ஆலிம்களாக்குகிறேன்' என்று சொல்லி கிறிஸ்தவர்களாக்கிவிடுவார் போலிருக்கிறது. இறைவன் காப்பாற்றுவானாக!

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.