அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 3, 2013

வஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் பேசக்கூடியவன் அந் நஜாத்திற்க்கு ஒரு விளக்கம்


என்ன தான் சில ஆலிம்சாக்கள் தங்களை புரட்சிக்காரர்களாக, புதிய கருத்துக்களை கூறுபவர்களாக, மூட முல்லாக்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டிக் கொண்டாலும் கூட சில விசயங்களில் இவர்களும் அறிவு சூனியங்கலாகவே   இருப்பதை உணரமுடிகிறது. இது இவர்களும் நேர்வழியில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அந்- நஜாத் ஏட்டின் ஆகஸ்ட் இதழில் ஐயம் தெளிவு பகுதியில், நமது இறுதி நபிக்குப் பின் அல்லாஹ் கலிபாக்களிடமோ வலிமார்களிடமோ அசரீரியாக பேசியுள்ளானா?  என்ற கேள்விக்கு ஆசிரியர் தந்துள்ள பதில் இதற்க்கு ஓர் அழகான எடுத்துக்காட்டாகும். அவர் கூறியுள்ள பதில் இதுதான்.

"அல்லாஹ் அவ்வாறு நமது இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தக் கலீபாக்களிடத்திலும் வலிமார்களிடத்திலும் பேசியதற்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லை"

கலிபமார்கலோடும் வலிமார்கலோடும் இறைவன் பேசியதற்கு ஆதாரம் குர்ஆனில் எவ்வாறு இருக்கமுடியும்? திருக்குர்ஆன் நபிபெருமானாரின் காலத்திலுள்ளது அல்லவா? அதில் அக்காலத்திற்குப் பிறகுள்ள வரலாறு அவற்றில் எப்படி காட்டப்பட முடியும்.

அடுத்து அவர் தமது கூற்றிற்கு ஆதாரமாகக் குறிப்பிடும் திருக்குரான் வசனம் 42:51 இறைவன் மனிதனிடத்தில் எவ்வாறு பேசுவான் என்பதை எடுத்துரைக்கிறதேயொழிய அவர் யாருடனும் இனி பேசமாட்டான் என்றோ பேசுவதை நிறுத்திவிட்டான் என்றோ கூறவில்லை.

இறைவன் மனிதனிடத்தில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் காட்டயியலாத நிலையில் நஜாத் ஆசிரியர் அடுத்து கீழ்வருமாறு ஏனைய மூட முல்லாக்களை போன்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

"இவ்வாறு அல்லாஹ் யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பவற்றை மிகத் தெளிவாக வரையறுத்து அல்குரான் கூறியிருப்பதன் நோக்கம் பின்னால் வரும் பித்தலாட்டக்காரர்களின் சூழ்ச்சியிலிருந்து நம் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளாது மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்."

நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள திருமறை வசனம் 42:51, இறைவன் பொதுவாக மனிதனிடத்தில் "வஹி" மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, வானவர் மூலமாகவோ பேசுகின்றான் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

யாரைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை அவ்வாறிருக்க, 'யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பதை அந்த வசனம் தெரிவிப்பதாக ஆசிரியர் கூறியிருப்பது அவர் முற்றாக குழம்பி போயிருக்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

நஜாத் ஆசிரியர் பொறுப்பாகப் பதில் கூறுபவராக இருந்தால், நபி பெருமானாருக்குப் பின் யாருடனும் இறைவன் பேச மாட்டான் என்ற அவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரம் தந்திருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் 'பித்தலாட்டக்காரர்கள் என்று அவர் மறை முகமாக தாக்கி இருப்பது அவரது பேதைமைதனத்தையே வெளிபடுத்துகிறது. இத்தகையோரின் பதில்களை "பத்துவாக்களாக" எண்ணுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது!

அல்லாஹ் அன்று பேசியது போன்று என்றும் பேசுவான் என்பதே உண்மை! அண்ணல் நபி பெருமானாருக்குப் பிறகு அவன் யாருடனும் பேச மாட்டன் என்று கூறுவது அறியாமை!!

வஹி பற்றித் திருக்குர்ஆன் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

நிச்சயமாக எவர்கள் எங்களுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறி அதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களிடத்து மலக்குகள் இறங்கி நீங்கள் பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம் என்று கூறுவார்கள். (41:31)

இந்தத் திருவசனம் உறுதியான நம்பிக்கையாளர்களிடம் மலக்குகள் வந்து வஹி அறிவிப்பார்கள் என்பதை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு பின் கலிபாக்களோ வலிமார்களோ இறை அறிவிப்பு பெறவில்லை என்று கூறுவது மேற்கண்ட திருவசனப்படி அவர்கள் முழுமையான. உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். கலிபாக்கள் நபிமார்களைத் தொடர்பவர்களும், பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிக்களுமாவார்கள். வலிமார்களோ அல்லாஹ்வின் அன்புக்கு பாத்திரமாவார்கள். இறைவன் இத்தகையோர்களோடு பேசாமல் இருப்பான? இறைவன் இவர்களோடு பேசவில்லை என்றால் இவர்களுக்கும் ஏனையோருக்கும் என்னதான் வேறுபாடு?

அடுத்து திருக்குரானில் இவ்வாறு காண்கிறோம்:-

"அல்லா மலக்குகளை தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் "வஹி" கொடுத்து அனுப்புகின்றான். (16:3)

"அல்லா மிகப் பெரும் உயர்ந்த பதவியுடயவனும் அர்ஷுக்கு சொந்தக்காரனும ஆவான். அவன் தன் அடியார்களில் தான் விரும்புபவர்களிடத்து "வஹி" இறக்குகின்றான்."(40:16)

இந்த இரு வசனங்களும் இறைவன் வானவர்கள் மூலமாக தனது அடியார்களுக்கு செய்தி அனுப்புவான் என்பதை உறுதிசெய்கின்றன.

மேற்கூறப்பட்ட மூன்று வசனங்களிலும். "ததனஸ்ஸிலு" , "யுனஸ்ஸிலு" "யுஹ்யா" என்ற சொற்களே இடம் பெற்றுள்ளன. இச்சொற்கள் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் குறிப்பிடும் சொற்களாகும். எனவே இந்த வசனங்கள் கடந்த காலத்தை குறிப்பிடுபவை எனக் கருத இடமில்லை.

இனி இது குறித்து நபி மொழிகளில் என்ன காணப்படுகிறது என்பதை பார்ப்போம்.

வஹி பற்றிய நபிமொழிகள்

வஹி என்னும் இறையருள் தமது சமுதாயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

சஹீஹுல் புகாரியில் இவ்வாறு காணப்படுகிறது:-

உங்களுக்கு முன் இஸ்ரவேலர்களில் நபிமார்கலல்லாதவர்களிடமும் இறைவன் பேசியிருந்தான். எனது சமுதாயத்திலும் அப்படிப்பட்டவர்கள் (வஹி, இல்ஹாம் பெறுகின்றவர்கள்) இருப்பார்கள் அவர்களில் உமரும் ஒருவராவார். (புகாரி - அத்தியாயம் மனாஹிப் உமர்)

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முகத்தஸ் என்றால் யார் என்று வினவியதற்கு, எவரோடு இறைவன் அவருடைய மொழியில் பேசுவானோ அவருக்கு முகத்தஸ் என்று பெயர் என அவர்கள் பதிலளித்தார்கள். (தாரிகுல் குலபா - திப்ரீ)

இந்த இரண்டு நபி மொழிகளிலிருந்து நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இறைவன் மற்றவர்களோடு பேசியிருக்கிறான் என்பதும் அன்னவரின் காலத்திற்கு பிறகும் பேசி வந்திருப்பான் என்பதும் தெளிவாகிறது.

இமாம்களின் கருத்து

'வஹி' அனுப்பப்படுவது நிறுத்தப்படவில்லை என்பதை இஸ்லாமிய அறிசர்களும் உறுதி செய்துள்ளனர்.

செய்குல் அக்பர் ஹஸ்ரத் முஹைதீன் இப்னு அரபி(ரெஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :-

"திருமறையில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளில் அல்லாஹ் தனது நல்லடியார்களான வலிமார்களோடு உரையாடுகின்றான்"
(புதுகாத்தே மக்கியா)

வாக்களிக்கப்பட்ட மசீஹிர்க்கு 'வஹி' இறங்குமா என அல்லாமா இப்ன் ஹைஜெரிடம் கேட்கப்பட்டபோது ஆம் என அவர்கள் பதிலளித்ததோடு சஹீஹ முஸ்லிமிலுள்ள கீழ் வரும் நபிமொழியை ஆதாரமாக எடுத்துக்காட்டினார்கள். வாக்களிக்கப்பட்ட மசீஹீர்க்கு ஜிப்ரீல் மூலமாக வஹி இறங்கும். ஏன்னெனில் ஜிப்ரீல் அல்லாஹ்விற்கும் நபிமார்களுக்கும் இடையிலான (வாக்களிக்கப்பட்ட மசிஹ நபியாக இருப்பார்) தூதுவராவார். அதோடு, நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு பூமியில் ஜிப்ரீல் இறங்கமாட்டார்கள் என்று கூறுவது தவறான் கூற்று என்றும் "ஷரியத்தை" கொண்ட வஹியே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.
(தப்சீர் ரூஹுல் மஆனி)

சுருக்கமாக, திருக்குர்ஆன், ஹதீஸ் , இமாம்களின் கருத்துக்கள் இவையாவுமே 'வஹி' வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அண்ணல் நபி பெருமானாருக்கு பிறகு வஹி வருவது நின்றுவிட்டது. இறைவன் யாருடனும் பேசமாட்டான் என்று நஜாத் ஆசிரியர் மற்றும் முல்லாக்களின் கூற்று அடிப்படை அற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.